ரஜினி சார், கமல் சார், விஜய் அண்ணா படம் பார்த்து தான் வளர்ந்தேன்.. ’அதிரடி’ யா பேசிய சஞ்சு சாம்சன்!
சென்னை: இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள "அதிரடி" திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா திரைக்கதை எழுதியுள்ளனர். மலையாளத்தில் வெற்றிகரமாக வெளியான இத்திரைப்படம், வரும் 22 ஆம் தேதி தமிழில் "பைவ் ஸ்டார் செந்தில்" வெளியீட்டில் வெளியாகிறது.
இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பான நிகழ்ச்சி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது, பேசிய அவர், சிறு வயதில் இருந்தே ரஜினி சார் படம், கமல் சார் படம், விஜய் அண்ணா படம் பார்த்து தான் வளர்ந்தேன் என பேசியது தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நிகழ்வில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படத்தின் தலைப்பு குறித்து விவாதித்தோம். அப்போது, பசில் ஜோசப் தான் 'அதிரடி' என்ற தலைப்பை பரிந்துரைத்தார்" என்றார். மேலும், "'அதிரடி' என்பது முற்றிலும் தமிழ்ப் பெயர் என்றும், இந்தச் சொல்லுக்கு ஒரு தாக்கம் இருப்பது போலவே, இத்திரைப்படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் அத்தகைய தாக்கம் உண்டு" என அவர் குறிப்பிட்டார். அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை ஆதரிக்க வேண்டும் எனவும், பசில் ஜோசப், டொவினோ தாமஸ் ஆகியோருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது எனவும் தெரிவித்தார். கல்லூரி வாழ்க்கை பின்னணியைக் கொண்ட இத்திரைப்படம், தமிழ் ரசிகர்களின் ரசனைக்குப் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பால்சன் ஸ்கரியா, "தமிழ் கற்றுக்கொண்டு இந்த மேடையில் பேசுகிறேன். அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இது எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். மலையாளத்தில் இப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது, உங்களுக்கும் இது பிடிக்கும்" என்றார். மேலும், "இப்படத்திற்கான வசனங்கள், வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல், தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றாற்போல் மிகுந்த மெனக்கெடலுடன் எழுதப்பட்டுள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"எல்லாருக்கும் வணக்கம்," என தனது உரையைத் தொடங்கிய பசில் ஜோசப், "நான் தான் தமிழில் டப்பிங் செய்தேன். எனவே தமிழ் எனக்கு பரிச்சயமானது, இந்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது" என்றார். சிறு வயதிலிருந்தே "அதிரடி" என்ற வார்த்தையை கேட்டு வளர்ந்த தான், தற்போது அதே பெயரில் ஒரு படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி எனத் தெரிவித்தார். மலையாளத்தில் கிடைத்த வரவேற்பு போலவே, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிய வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பசில் ஜோசப் கூறினார். "படத்தில் தமிழ் பாடல்கள் சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படம் உங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும். தமிழில் டப் செய்தது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சில வார்த்தைகள் கடினமானதாக இருந்தாலும், பின்னர் தமிழ் அருமையாக வந்தது. எழுத்தாளர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர்" என்றார்.
உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், தமிழில் கிடைக்கும் வரவேற்பும், அவர்கள் அளிக்கும் பாசமும் பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் பசில் ஜோசப் தெரிவித்தார். "கடந்த முறை சென்னை வந்தபோது கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது. தமிழ் ரசிகர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்" என நெகிழ்ந்தார். நடிப்பு, இயக்கம் இரண்டிலும் தனக்கு இயக்கம் தான் அதிகம் பிடித்திருக்கிறது என்றும், நடிப்பை பயணிகள் இருக்கையுடன் ஒப்பிட்ட அவர், இயக்கப் பணியை ஓட்டுநர் இருக்கையுடன் ஒப்பிட்டு, 'ஓட்டுநர் இருக்கையில் இருப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இரண்டையும் ஒரு சேர செய்வது கடினம் என்பதால், இதுவரை யோசிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசியபோது, "அனைவருக்கும் வணக்கம். திரைப்பட நிகழ்வில் கலந்துகொள்வது ஒரு புதிய அனுபவம். நண்பர்கள் அழைப்பின்றி எங்கே செல்ல முடியும்? மிகவும் மகிழ்ச்சியாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது" என்றார். மேலும், "இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, பெரிய கதாபாத்திரம் என்றால் மட்டுமே நடிப்பேன் என்று மறுத்துவிட்டதாக நகைச்சுவையாகத் தெரிவித்தார். எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் தனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வார்கள்" என்றும் அவர் கூறினார்.
சஞ்சு சாம்சன், பசில் ஜோசப் குறித்து பேசும்போது, "பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட்டாலும், பணி என்று வரும்போது அவர் மிகவும் தீவிரமாக, அர்ப்பணிப்புடன் இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தாலும், 'முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே' என்று கேட்பார். கிட்டத்தட்ட வாரம் முழுவதிற்குமான தனது திட்டமிடலுடன் செயல்படும் அவரது அதீத உழைப்புக்கு ஏற்றப் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இங்கு வந்திருக்கிறேன்" என்று பாராட்டினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பிறகு தனது பொறுப்பு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட சஞ்சு சாம்சன், "ஒரு பெரிய மற்றும் அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும்போது, கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்றார். கிரிக்கெட்டைத் தாண்டி வெளியில் செல்லும்போது, ரசிகர்கள் "சேட்டா, அடுத்தப் போட்டியை ஜெயிங்க, கோப்பையை வெல்லுங்க, தட்றோம், தூக்குறோம்" போன்ற அன்பு வார்த்தைகளை வெளிப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். "பொதுமக்கள் அளிக்கும் அன்பும் பாசமும் அளவில்லாதது, அது அவர்களின் இதயத்திலிருந்து வருவதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது" என்றும் அவர் கூறினார்.
சென்னையில் தான் தனது அழகான பயணத்தைத் தொடங்கியிருப்பதாகவும், சிறு வயதில் நிறைய தமிழ் படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும் சஞ்சு சாம்சன் தெரிவித்தார். தற்போது தமிழ்நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவது தனக்கு தமிழகத்தை இரண்டாவது வீடாக மாற்றியுள்ளது என்றார். "சென்னையின் உணவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் நாயர் மெஸ் உணவகத்தில் சாப்பிட்டேன், அங்கு உணவு மிக அற்புதமாக இருந்தது" என்றும் தனது சென்னை மீதான அன்பை வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications