வீட்டை இடிக்கச் சொன்ன ஆர்யா.. அதே இடத்தில் புது வீடு கட்டிய சந்தானம்.. கிரகப்பிரவேசம் களைகட்டுதே!
சென்னை: நடிகர் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் ஹீரோவாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை என்றாலும், சந்தானத்தின் கடன் தொல்லை மற்றும் பிரச்னைகள் தீர வழிவகுத்தது. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், தான் வாங்கிய பழைய வீட்டை ஆர்யா இடிக்க வைத்து விட்டார் என்று பேசியிருந்தார்.
அந்த இடத்தில் தற்போது புதிதாக ஒரு வீட்டைக் கட்டி கிரகப்பிரவேசத்தையும் செய்துள்ள சந்தானத்தின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் கசிந்து தீயாக பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க முடிவு செய்த நிலையில், சில படங்களை தயாரித்தும் நடித்து கடனில் சிக்கிக் கொண்டார். அவரது பிரச்னையை எல்லாம் ஆர்யா தீர்த்து வைத்த நிலையில், தற்போது சந்தானம் குடும்பத்துடன் ஹேப்பியாக புது வீட்டில் பால் காய்ச்சியுள்ளார் என ரசிகர்கள் ஆர்யாவை பாராட்டி வருகின்றனர்.
சந்தானத்தின் புது வீடு: விஜய் டிவியில் இருந்து முதன் முதலாக சினிமாவுக்கு வந்து பிரபலமான நடிகராக மாறியதே சந்தானம் தான். அவரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், யோகி பாபு, கவின், ஷிவானி நாராயணன், லாஸ்லியா என பலர் திரையுலகத்துக்கு வந்து ஸ்டாராக மாறியுள்ளனர். டைமிங் காமெடியில் கலக்கி வந்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா, அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் முழு நேர ஹீரோவாக மாறினார். இனிமேல் இப்படித்தான் என தொடர்ந்து ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய சந்தானத்துக்கு சினிமாவில் அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து சொதப்ப, தில்லுக்கு துட்டு வரிசை படங்கள் மூலம் கம்பேக் கொடுத்தார். டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியான நிலையில், தற்போது தனது கனவு இல்லத்தை கட்டி முடித்து குடியேறி இருக்கிறார்.
ஆர்யாவால் நடந்த நன்மை: ஒரு பழைய வீட்டுடன் இருந்த நிலத்தை தனது உழைப்பின் மூலம் வாங்கிய சந்தானம், அந்த வீட்டையே ரெனோவேட் செய்து குடிபுக திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த வீட்டை பார்த்த ஆர்யாவுக்கு இதெல்லாம் உனக்கு செட்டாகாது மச்சி என சொல்லி வீட்டை இடித்துவிட்டு புதியதாக கட்டச் சொல்லிவிட்டார். அந்த தகவலை டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் புரமோஷனின் போது, சந்தானமே மேடையில் பேசியிருந்தார். ஆர்யா தயாரிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்தானத்துக்கு பெரிய சம்பளம் கிடைத்த நிலையில், அவருடைய பிரச்னைகள் தீர்ந்து விட்டன.
காமெடி நடிகராக முடிவு: ஆர்யா தயாரிப்பில் ஹீரோவாக நடித்த சந்தானம் அடுத்ததாக சிம்பு நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து மீண்டும் காமெடி நடிகராக முடிவு செய்துள்ளார். மேலும், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திலும் சந்தானம் காமெடியனாக நடிக்கப் போவதாகவும் ஆர்யா படத்தில் காமெடி நடிகராகவும் முடிவு செய்திருபப்தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் தொடர்ந்து வரும் நிலையில், சந்தானத்தின் இந்த முடிவை ரசிகர்களும் வரவேற்று வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











