நீ என்ன சூப்பர் ஸ்டாரா?.. சத்குருட்ட காசு வாங்கிக்கொடு.. சந்தானத்தை வைத்து செய்த ஆர்யா
சென்னை: ஆர்யா தயாரிப்பில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஹீரோவாக எப்படியாவது பெரிய வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு இந்தப் படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். பட ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதான் காரணமாக ப்ரோமோஷன் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிறகு சிம்பு மூலம் திரைத்துறைக்கு வந்தவர் சந்தானம். தனது திறமையின் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்ற அவர் ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்துக்கு வந்தார். அவரது காமெடி கவுண்டமணியின் ஸ்டைலை நியாபகப்படுத்தினாலும் ரசிக்கும்படியாகவே இருக்கும். பல ஹீரோக்களின் படங்களில் காமெடி ரோலை ஏற்று அந்தப் படம் அடுத்தக்கட்டத்துக்கு செல்வதற்கு உதவியிருக்கிறார் அவர். அவரது காமெடிக்கென்று இன்றும் பலர் ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.
ஹீரோவான சந்தானம்: காமெடி ரூட்டில் முழு வேகத்தில் சென்றுகொண்டிருந்த அவருக்கு திடீரென ஹீரோ ரூட் மீது கவனம் திரும்பியது. அதன்படி சோலோ ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் நடித்த படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு பெயரையும் கொஞ்சம் வெற்றியையும் வாங்கிக்கொடுத்தது. எனவே கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைமையில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிடி நெக்ஸ்ட் லெவல்: சூழல் இப்படி இருக்க அவர் இப்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகம் சந்தானத்துக்கு பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதன் காரணமாக தற்போது உருவாகியிருக்கும் இரண்டாவது பாகத்தின் மீது அவருக்கு உச்சக்கட்ட நம்பிக்கை இருக்கிறது. இதில் அவருடன் கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
ஆர்யா தயாரிப்பாளர்: இந்தப் படத்தை நடிகரும் சந்தானத்தின் நெருங்கிய நண்பருமான ஆர்யா தயாரித்திருக்கிறார். முதன்முறையாக சந்தானத்தை வைத்து ஆர்யா படம் தயாரித்திருக்கிறார். அதனால் இந்தப் படம் ஆர்யாவுக்கு லாபம் கொடுக்குமா இல்லை நஷ்டத்தை கொடுக்குமா என்ற கேள்வியையும், எதிர்பார்ப்பையும் பலர் கிளப்பியிருக்கிறார்கள். படமானது மே 16ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் படக்குழுவுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன.
பத்திரிகையாளர் சந்திப்பு: படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் சிம்பு கலந்துகொண்டார். இதற்கிடையே ராம்குமார் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் எஸ்டிஆர் 49ல் சந்தானம் காமெடி ரோலில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது சந்தானம் படு ஜாலியாக பேசினார்.
சந்தானம் பேச்சு: ஆர்யா பற்றி பேசிய சந்தானம், 'நாங்கள் நண்பர்களாக இருக்கும்போது எங்களுக்குள் சண்டை வந்ததில்லை. ஆர்யா தயாரிப்பாளரான பிறகு சண்டை வந்திருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஃபோன் செய்து, 'உனக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என்று சும்மாதான் பட்டம் வைத்தேன். வேட்டையன் படத்தின் ஷூட்டிங் செலவும், இந்தப் படத்தின் ஷூட்டிங் செலவும் ஒன்றாக இருக்கிறது. நீ என்ன சூப்பர் ஸ்டாரா?.. அவர் ரேஞ்சுக்கு செலவு செய்ற' என்று கேட்டார். ஒருமுறை நான் கோபித்துக்கொண்டு ஈஷா யோகா மையத்துக்கு சென்றுவிட்டேன். உடனே எனக்கு ஃபோன் செய்து, 'நீ ஈஷாவுக்கு போயிருக்கல்ல. சத்குருட்ட சொல்லி பணம் வாங்கிக்கொடு. அவர் பெயரை தயாரிப்பாளர் என்று போட்டுக்கொள்ளலாம் என சொல்வார்'. இப்படி எங்களுக்குள் ஜாலியாக சில விஷயங்கள் நடக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











