தொண்டர்கள் தரும் உற்சாகம்தான் இளமையின் ரகசியம்: சரத்குமார்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமாருக்கு 59 வயது நிறைவடைந்து, நேற்று (ஜூலை 14) 60-வது வயது பிறந்தது. இதையொட்டி அவர் தனது 60-வது பிறந்தநாளை தனது மனைவி ராதிகாவுடன் மணி விழாவாக கொண்டாடினார்.
பிறந்தநாள் விழாவை ஒட்டி கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் 'கேக்' வெட்டி உற்சாகப்படுத்தினார் சரத்குமார்.
அப்போது அறுபது வயதைக் கடந்தும் இளமையாக இருப்பதன் ரகசியம் பற்றி பலரும் சரத்குமாரிடம் கேட்டனர். தொண்டர்கள் தரும் உற்சாகம்தான் இளமையின் ரகசியம் என்று கூறினார் சரத்குமார்.

வீட்டில் சிறப்பு ஹோமம்
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் விழா நடந்தது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. சரத்குமார் பட்டு வேட்டி-சட்டை அணிந்திருந்தார். அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் தங்க நிற ஜரிகையுடன் கூடிய சிவப்பு பட்டுப்புடவை அணிந்திருந்தார். இருவரும் சமத்துவ மக்கள் கட்சி கொடியைப் போல் சிவப்பு-மஞ்சள் நிற பூக்கள் நிறைந்த மாலைகளை அணிந்திருந்தார்கள்.

உறவினர்கள் வாழ்த்து
சரத்குமார்-ராதிகா சரத்குமார் தம்பதிக்கு, ‘மாலை முரசு' நிர்வாக இயக்குனர் பா.இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி' இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, நடிகரும், தொழில் அதிபருமான ராஜ்குமார், பட அதிபர் வாசு, நடிகர் ராம்கி, அவருடைய மனைவி நிரோஷா மற்றும் ஏராளமான பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தினர், உறவினர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டம்
சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை ராமகிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில், சரத்குமார் ‘கேக்' வெட்டி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

திரைப்படத்துறையினர் வாழ்த்து
அப்போது அவருக்கு திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம், ஜூனியர் ஆர்டிஸ்ட் யூனியன், டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் உள்பட திரையுலகினைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ‘கானா' உலகநாதன், நடிகர்கள் தாமு, ஆதவன், டைரக்டர் வேந்தன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தொண்டர்கள் வாழ்த்து
தமிழகம் முழுவதில் இருந்தும் திரளாக வந்திருந்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞரணி மற்றும் மகளிரணியினர் நீண்ட வரிசையில் நின்று பூங்கொத்து, சால்வைகள், சந்தன மாலைகள் போன்றவைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆளுயர மாலை, பூங்கொத்துகள், மலர்க்கிரீடம் அணிவித்தும் பலர் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்களின் வாழ்த்துகளை சரத்குமார் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

ஒற்றுமையாக வாழுங்கள்
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், மக்கள் அனைவரும் சாதி மதங்களை கடந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார்.

காமராஜர் மணிமண்டபம்
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த செல்கிறேன். அப்போது மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் இடத்தை பார்வையிடுவேன். தற்போது வரை 30 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள பணிகள் 2015 டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

இளமையின் ரகசியம் என்ன?
தொண்டர்கள், ரசிகர்கள் தரும் உற்சாகமே இளமைக்கு முக்கிய காரணம். அதோடு தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். அதை இன்னும் அதிகப்படுத்தி வருகிறேன். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடுவேன். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. எனவே உணவிலும் கட்டுப்பாடு கடைபிடிக்கிறேன்.

வாரணாசியில் சண்டமாருதம்
‘சண்டமாருதம்' படத்தில் நடித்து வருகிறேன். படத்தின் ‘கிளைமேக்ஸ்', வாரணாசியில் படமாக்கப்பட உள்ளது என்று கூறினார் சரத்குமார்.

வைகோ, தா.பாண்டியன் வாழ்த்து
சரத்குமாரின் மணிவிழாவிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி., ஆரூண், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சத்யராஜ், டைரக்டர் டி.ராஜேந்தர் உள்பட திரையுலகை சேர்ந்த பிரமுகர்களும் தொலைபேசி மூலம் சரத்குமாருக்கு பிறந்தநாள்- மணி விழா வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

நட்சத்திர ஹோட்டலில் விருந்து
மணிவிழாவையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், சரத்குமார் விருந்து கொடுத்தார். இந்த விருந்தில் விக்ரம், ஆர்யா, பரத், சிவகார்த்திகேயன், விஜயகுமார், அருண்விஜய், சார்லி, சரோஜா தேவி, பூர்ணிமா பாக்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்பிகா, ராதா, மீனா, ஷோபனா, மாளவிகா, ஆகியோர் பங்கேற்றனர்.

இயக்குநர்கள் வாழ்த்து
திரைப்பட டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் பாக்யராஜ், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி., தங்கர்பச்சான், அமீர், சமுத்திரகனி, உள்ளிட்ட இயக்குநர்கள் பங்கேற்று வாழ்த்து கூறினர்.


Click it and Unblock the Notifications











