கணவரை இழந்து..அக்காவை கஷ்டப்படுத்துனாங்க..சரத்தான் எல்லாமே..கலங்கிய சரத்குமாரும் அவரது அக்காவும்
சென்னை: சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் அவர் இப்போது குணச்சித்திர வேடத்தில் கலக்கிவருகிறார். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் இருக்கும் அவர் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவரது மகள் வரலட்சுமியும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு கடந்த வருடம்தான் தாய்லாந்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்தச் சூழலில் தனது அக்கா குறித்து கண் கலங்கி பேசியிருக்கிறார் சரத்குமார்.
சுப்ரீம் ஸ்டார் என்று கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சரத்குமார். கட்டுமஸ்தான உடம்பு, நல்ல திறமை ஆகியவைகளை கொண்டிருந்த அவர் 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். முதலில் வில்லனாகத்தான் அறிமுகமானார் அவர். அதற்கு பிறகு ஹீரோவாக ஏராளமான படங்களில் நடித்திருந்த அவருக்கு என்று பலர் ரசிகர்களாக இருந்தனர். இதற்கிடையே ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டமும் பட்டவர். நடிப்பதற்கு சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்ததால் தயாரிப்பாளர் ஆகலாம் என்ற முடிவில் நவரச நாயகன் கர்த்திக்கை வைத்து கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தை தயாரித்தார்.
பல லட்சம் ரூபாய் நஷ்டம்: ஆனால் அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் பல லட்சங்கள் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. விட்டதை பிடிக்க மற்றொரு படத்தை தயாரித்தார் சரத். ஆனால் அப்படமும் தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் அவரது குடும்பம் கடுமையான வறுமையில் சிக்கியது. இருப்பினும் சினிமாவிலிருந்து விலகக்கூடாது என முடிவெடுத்து முழு நேர நடிகர் ஆக திட்டம் தீட்டினார். அதற்காக நடிப்பு பயிற்சியும் எடுத்துக்கொண்டு கடுமையாக உழைத்தார். மேலும் அவர் மிஸ்டர் மெட்ராஸ் என்ற ஆணழகன் பட்டத்தையும் வென்று அசத்தியிருந்தார்.
திருப்புமுனை தந்த புலன் விசாரணை: சரத்குமாருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது ஆர்.கே.செல்வமணி விஜயகாந்த்தை வைத்து இயக்கிய புலன் விசாரணை திரைப்படம். அந்தப் படத்தில் மிரட்டும் வில்லனாக தோன்றிய அவர் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படத்தில் சரத்துக்கு நல்ல பெயரும் கிடைத்தது. இதனையடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார் சரத்குமார்.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்: ஒருகட்டத்தில் சரத்குமாருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைக்க அதனையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு சேரன் பாண்டியன், சூரியன், நாட்டாமை, சூரிய வம்சம், இந்து, மூவேந்தர், பாட்டாளி, மாயி என பல ஹிட் படங்களில் நடித்து 90களில் முன்னணி ஹீரோ என்ற இடத்தை பிடித்துக்கொண்டார். அதுமட்டுமின்றி விக்ரமுடன் விண்ணுக்கு மண்ணுக்கும், பிரபுதேவாவுடன் பெண்ணின் மனதை தொட்டு போன்ற படங்களில் கெஸ்ட் ரோலாகவும் கலக்கியவர்.இப்போது குணசித்திர வேடங்களில் அசத்துகிறார்.

இரண்டு திருமணங்கள்: இதுஒருபக்கம் இருக்க முதலில் அவர் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண உறவு பாதியில் முடிந்தது. அவர்களுக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி. சாயாவை பிரிந்த சரத் அடுத்ததாக நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போது சுமூகமாக அவர்களது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது சகோதரி குறித்து கண் கலங்கி பேசியிருக்கிறார் அவர்.
சரத்குமாரின் பேச்சு: அவர் சமீபத்தில் தனியார் சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரது அக்கா குறித்து பேசிய அவர், "என்னுடைய அக்கா ரொம்பவே கஷ்டப்பட்டவர். முதலில் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். கணவரை இழந்த பிறகு ஒருமுறை மல்லிகாவை (சரத்தின் சகோதரர்) அந்தப் பக்கம் போக சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அப்படி சொன்னவர்கள் எங்களுக்கு நெருங்கிய சொந்தம்தான். அது எனக்கு பெரிய கஷ்டத்தை கொடுத்தது. பிறகு அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போது சந்தோஷமாக இருக்கிறார். எனக்கு ஒரு சகோதரர் இருந்தார். அவர் உயிரிழந்துவிட்டார். எனக்கு ஒன்று என்றால் என்னுடைய அக்கா பதறிவிடுவார்" என்றார்.
அக்காவின் எமோஷனல் பேச்சு: அதேபோல் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவரது அக்கா மல்லிகா, "சரத்குமார் சின்ன வயதாக இருக்கும்போது அவருக்கு நான் நிறைய கதைகள் சொல்வேன். என்னுடைய கற்பனைகளில் நான் சொல்லிய கதைகளை அவர் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருப்பார். சிறு வயதில் நாம் படிக்கும்போது புத்தக பையை பக்கத்தில் வைத்துக்கொண்டு படிப்போம். ஆனால் சரத்குமாரோ, தன்னை சுற்றி புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொள்வார். ஏன் என்று கேட்டால் எந்தப் பூச்சியும் என்னை கடித்துவிட கூடாது என்று க்யூட்டாக சொல்வார்.நானும், சரத்குமாரும் ரொம்பவே க்ளோஸாக இருந்தோம்.
என்னிடம்தான் முதலில் சொன்னார்: ஏன்? சினிமாவில் சேரப்போகிறார் என்பதைக்கூட என்னிடம்தான் அவர் முதலில் சொன்னார். அம்மாவுக்கு எங்களைவிடவும் சரத்குமாரைத்தான் ரொம்பவே பிடிக்கும். அவர் ஏதாவது தப்பு செய்துவிட்டால் அப்பாவிடமிருந்து சரத்குமாரை அம்மாதான் காப்பாற்றுவார். அவருக்காக என்னவெல்லாமோ செய்திருக்கிறார். அம்மாவுக்கு நானும் உடந்தையாகத்தான் இருந்தேன். ஏனெனில் சரத்குமாருக்காக அதனை நாங்கள் செய்துகொண்டே இருந்தோம். அவர் ஐஐடியில் படித்துக்கொண்டிருந்தபோது டெல்லிக்கு சென்றிருந்தார். அப்போது நிறைய பொருட்களை எனக்காக ஆசை ஆசையாக வாங்கி வந்திருந்தார்.எப்படி வாங்க தெரிந்தது என்று நான் ரொம்பவே யோசித்தேன்.
சரோஜா தேவி வீட்டில்: நான் நடிகை சரோஜா தேவியின் தீவிரமான ரசிகை. அவரை எவ்வளவு பிடிக்கும் என்று சரத்குமாருக்கு நன்றாகவே தெரியும். அவர் நடிகரான பிறகு ஒருமுறை சரத்திடம், 'நீ சினிமா ஃபீல்டில்தானே இருக்கிறாய். நீ நினைத்தால் என்னை சரோஜா தேவியை பார்க்க வைக்க முடியும்' என கூறினேன். பிறகு ஒருநாள் எதுவுமே சொல்லாமல் என்னை காரில் அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது எங்கே போகிறோம் என்றே எனக்கு தெரியவில்லை. திடீரென அவர் என்னிடம், சரோஜா தேவியை பார்க்க அவரது வீட்டுக்கு போகிறோம் என்று சொல்லி எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.சந்தோஷத்தில் எனக்கு தலை, காலே புரியவில்லை. இந்த மாதிரியான எனது ஆசைகளை பூர்த்தி செய்வதற்கு அவரால் மட்டும்தான் முடியும்.
வைர நெக்லஸ்: அதேபோல் எனது மகள் பத்தாவது வகுப்பில் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் செய்திருந்தார். உடனடியாக அவருக்கு சரத்குமார் ஒரு வைர நெக்லஸை பரிசாக கொடுத்தார். இன்றளவும் அதனை அவர் போட்டுக்கொண்டிருக்கிறார். மேலும் என்னுடைய மகளுக்கு சரத் போல் ஒரு தாய் மாமன் கிடைக்கமாட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மகளின் திருமணத்தை தந்தை ஸ்தானத்தில் நின்று சரத்குமார்தான் நடத்திக்கொடுத்தார். எனக்கு சரத்குமார்தான் எல்லாமே" என்றார். சரத்குமாருடைய சகோதரியின் பேச்சும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











