இனி 'சுப்ரீம் ஸ்டார்' இல்லையாம்.. 'புரட்சித் திலகமாம்'! - இது சரத்குமார் முடிவு
இனி தன் பெயருக்கு முன்னால் சுப்ரீம் ஸ்டாருக்கு பதில், புரட்சித் திலகம் என்ற அடைமொழியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார் சரத்குமார்.
சரத்குமார் இதற்கு முன் தான் நடிக்கும் படங்களில் தன் பெயருக்கு முன் சுப்ரீம் ஸ்டார் என்று போட்டுக் கொள்வது வழக்கம். அவரது பிஆர்ஓ, இன்னும் ஒரு படி மேலேபோய், 'சுப்ரீம் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்க ஆரம்பித்தார்.

இப்படியெல்லாம் அடைமொழி போட்டுக் கொண்ட நேரமோ என்னமோ... பிஸியாக இருந்த சரத்குமார், சினிமாவில் நடிப்பது படிப்படியாகக் குறைந்து போனது. சினிமா அரசியல் மற்றும் சட்டமன்ற அரசியலில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இப்போது அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதில் அவர் இரு வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம் என்ற படத்துக்கான பூஜை இன்று மயிலை சிவன் கோயிலில் தொடங்கியது.
சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் தனது பெயருக்கு முன் புரட்சித் திலகம் என்ற அடைமொழியைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் சரத்குமார். இனி சுப்ரீம் ஸ்டார் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாக்யராஜ் மேல என்ன கோவமோ?
இதற்கு முன் புரட்சித் திலகம் என்ற பட்டப் பெயரைப் பயன்படுத்தி வந்தவர் கே பாக்யராஜ். புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என அழைக்கப்பட்ட எம்ஜிஆரின் கலையுலக வாரிசு என்ற முறையில், அவரது பட்டப்பெயர்களின் பாதியை எடுத்து புரட்சித் திலகம் எனப் பயன்படுத்தி வந்தார்.
இப்போதும் அவரை, அவரது ரசிகர்கள் புரட்சித் திலகம் பாக்யராஜ் என்றே போஸ்டர்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சரத்குமார் புரட்சித் திலகம் பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே விஜயகாந்தை சினிமாவில் புரட்சிக் கலைஞர் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவது நினைவிருக்கலாம்.
இதில் ஹைலைட், "இந்த அடைமொழி சூடிக் கொள்ள மேலிடத்தில் அனுமதி பெற்றுவிட்டாரா சரத்குமார்?" என கோலிவுட் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதுதான்!


Click it and Unblock the Notifications











