Vadivelu - விஜயகாந்த் - வடிவேலு பிரச்னை.. அவர் அதை செய்திருக்கலாம்.. சரத்குமார் ஓபன் டாக்
சென்னை: விஜயகாந்த்தின் உயிரிழப்பு கடந்த மாதம் நிகழ்ந்தது. அவரது உயிரிழப்புக்கு செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள் வரை திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் வடிவேலுவோ நேரில் செல்லவில்லை. இது கடும் கண்டனங்களை பெற்றுக்கொடுத்தது. சூழல் இப்படி இருக்க விஜயகாந்த் - வடிவேலு பிரச்னை குறித்து நடிகர் சரத்குமார் ஒரு விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.
விஜயகாந்த் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஒருவர். 150 படங்கள் வரை நடித்திருந்த அவர் அரசியலுக்கு வந்து எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார். பிறகு உடல்நிலை சரியில்லாமல் போக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிய அவர் தொண்டர்களை அவ்வப்போது சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

இரங்கல் தெரிவிக்காத வடிவேலு: விஜயகாந்த்தின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் விஜயகாந்த்தால் பலன் அடைந்த வடிவேலுவோ நேரிலும் செல்லவில்லை; இரங்கலும் தெரிவிக்கவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்த சூழலில் நடிகர் சரத்குமார் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.
சரத்குமார் கருத்து: அவர் ஒரு நேர்காணலில் பேசியபோது, "சினிமாவில் எனக்கு உற்ற நண்பர் என்றால் அது விஜயகாந்த்தான். அவர் மிகச்சிறந்த மனிதர். எங்களுக்குள் போட்டியோ, பொறாமையோ இருந்ததில்லை. எனக்கு முதன்முறையாக வாய்ப்பு கொடுத்தது விஜயகாந்த்தான். புலன் விசாரணை படத்துக்காக அவரது அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். படத்தின் க்ளைமேக்ஸில் நான் விஜயகாந்த்தை அடிக்க வேண்டும். ஆனால் நான் தயங்கினேன். விஜயகாந்த் என்னை சமாதானம் செய்தார். ஷாட்டை முடித்த பிறகு உனக்குதான் நல்ல பெயர் கிடைக்கும் என்றார். அதே மாதிரி கிடைத்தது.
தொடர் பயணம்: நடிகர் சங்கத்திலும் அவருடன் பயணப்பட்டிருக்கிறேன். கோபமுள்ள மனிதர்தான். ஆனால் அவரது பாணியே தனி. 3,4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடல்நிலை சரியில்லாதபோது போய் பார்த்தேன். அவருக்கு 40ஆவது ஆண்டு கலை விழா நடந்தது. அப்போது அரசியலில் இருவருமே எதிரும் புதிருமாக இருந்தோம். ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு போனேன். எங்களுக்குள் எப்போதுமே நட்பு இருந்தது உண்டு.
வெயிட் செய்த விஜயகாந்த்: ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த உறவுதான் விஜயகாந்த்துடன் எனக்கு இருந்தது. நாங்கள் நடிகர் சங்கத்தில் இருந்த நேரம் உண்மையில் பொற்காலம்தான். அவரை நான் விஜி சார் என்று அழைப்பேன். கேப்டன் பிரபாகரன் படம் நடிக்கும்போது இன்னொரு படத்தில் நடித்ததன் காரணமாக கழுத்தில் அடிபட்டது. ஆறு மாதங்கள் ஓய்வில் இருந்தேன். ஆனால் நான் வந்து நடித்த பின்புதான் படம் வெளியாக வேண்டும் என்று உறுதியாக இருந்து அதன்படியே செய்தார்.
வடிவேலு - விஜயகாந்த் பிரச்னை: நாம் சில நேரங்களில் தவறு செய்யலாம். விஜயகாந்த் - வடிவேலு இடையே ஏதோ ஒரு பிரச்னை வந்திருக்கலாம். விஜயகாந்த்கூட அதை பெரிதாக எடுத்திருக்கமாட்டார். அரசியல் களத்தில் வடிவேலு பேசியது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் பெரிய அளவில் இருவருக்கும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையிலேயே வடிவேலு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த போயிருக்கலாம். ஆனால் போயிருந்தால் என்ன நடக்கும் என அவர் நினைத்திருக்கலாம். வீட்டில் உ ட்கார்ந்துகூட வடிவேலு அழுதிருக்கலாம். அவரும் ஒரு மனிதர்தானே" என்றார்.


Click it and Unblock the Notifications











