கேரக்டரை மாற்றும் சத்யராஜ்
யூத் ஹீரோவாக இன்னும் கலக்கிக் கொண்டிருக்கும் சத்யராஜ், முழு நேர அப்பா ரோலுக்கு மாறியுள்ளார்.
இளமை காலமாகி ரொம்ப காலமான பின்னரும் கூட இன்னும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருப்பவர் எக்ஸ் யூத் சத்யராஜ். சிபியும் நடிகராக மாறிய பின்னர் அவருக்கு அப்பாவாக நடித்தார். அதுதான் அவர் ஹீரோ ரேஞ்சிலிருந்து இறங்கி வந்து நடித்த படம்.அப்படியும் கூட கோவை பிரதர்ஸ் படத்தில் மகன் சிபியுன் சேர்ந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் அவரையும் மிஞ்சி அதகளப்படுத்தினார்.
தொடர்ந்து ஹீரோவாக நடிப்பேன், அப்பாவாக நடிக்க மாட்டேன், சிபிக்கு மட்டும் வேண்டுமானால் அப்பாவாக நடிப்பேன் என்று கூறி வந்தார் சத்யராஜ். இந்த நிலையில் அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கண்ணா மூச்சி ஏண்டா என்ற படத்தில், அப்பா வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு மகனாக நடிக்கப் போவது மலையாளத்து பிருத்விராஜ். படத்தை இயக்கப் போவது பிரியா.
சிவாஜி படத்தில் சத்யராஜை வில்லனாக நடிக்கக் கூப்பிட்டார் ஷங்கர். ரஜினியும் கூட நேரடியாகவே சத்யராஜிடம் கோரினார். ஆனால் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார் சத்யராஜ்.
இப்போது தனது வயதை உணர்ந்து ரோல் மாற்றத்துக்கு ரெடியாகி விட்டார் சத்யராஜ். இந்த மாற்றம் குறித்து சத்யராஜிடம் கேட்டபோது, கதை எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோவைப் போலவே நமக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிந்தது.
அதற்காக ஹீரோவை ஓவர் டேக் செய்யும் வகையில் எனது கேரக்டர் இருக்கும் என்று கூறி விட முடியாது. ஆனால் நமக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் பிருத்விராஜின் அப்பாக கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இது எனக்குப் புதிதில்லை. வம்புச் சண்ட படத்திலும் கூட நான் அப்பா வேடத்தில்தான் வருகிறேன். அதில் எனக்கு மகனாக வருபவர் உதய் கிரண். இருவருக்கும் அதில் நல்ல ரோல்கள் என்றார் சத்யராஜ்.
தன்னோட கேரக்டரையே இப்போதுதான் சத்யராஜே புரிந்து கொண்டிருக்கிறார் அசத்துங்கப்பா!


Click it and Unblock the Notifications











