நீ இந்தப் படத்தோட ஹீரோ.. உன்னை எப்படி அப்படி சொல்ல முடியும்.. சத்யராஜிடம் கவுண்டமணி செய்த வாதம்
சென்னை: கவுண்டமணி தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். அவருக்கென்று ஹிட்டான காம்போ சில இருக்கின்றன. அந்த காம்போவில் ஒன்றுதான் சத்யராஜ் - கவுண்டமணி காம்போ. இப்போது கவுண்டமணி குறித்து சத்யராஜ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
கவுண்டமணி தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் யாராலும் மறக்க முடியாதது, மறுக்க முடியாதது. அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்பதுதான் உண்மை. அவர் அடிக்கும் ஒவ்வொரு கவுண்ட்டரும் ரகளையாக இருப்பவை. இதனாலேயே இன்றளவும் அவர் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இப்போது அவர் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துவருகிறார். மீண்டும் அவர் நடிக்க வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

செம காம்போ: எவர்க்ரீன் காமெடி காம்போ கவுண்டமணியும், செந்திலும் ஆவர். பல நூறு படங்களில் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கின்றனர். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் என அவர்கள் அதகளம் செய்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் பெரிது. ஒருகட்டத்தில் கவுண்டமணி இல்லாமல் செந்தில் இல்லை செந்தில் இல்லாமல் கவுண்டமணி இல்லை என்ற நிலையே திரைத்துறையில் நீடித்தது. அந்த அளவுக்கு இருவரும் நெருங்கி பழகினார்கள். கவுண்டமணி நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தபோது மீண்டும் நடிக்க வர வேண்டுமென்று அவருக்கு நீண்ட கடிதத்தையும் செந்தில் எழுதியது குறிப்பிடத்தக்கது.
யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். 'ஏன் ப்பா எல்லோரும் நடிக்க வந்துட்டா யார்தான் படம் பார்க்குறது' என்று சந்தானத்திடம் ஒரு முறை கவுண்ட்டர் அடித்திருக்கிறார் கவுண்டமணி. அதேபோல், 'நாய்க்கு என்ன பெயர் வைப்பது அதுக்கு பேர் நாய்தான்', நடிகர் சங்க பெயர் பற்றிய ஒரு கேள்விக்கு 'நடிகர் சங்கம் என்று வையுங்கள்' என்றது என அவரது ஆஃப் கேமரா கவுண்ட்டர்களும் ரகளையாக இருப்பவை.
சத்யராஜ் - கவுண்டமணி காம்போ: கவுண்டமணி - செந்தில் காம்போ எப்படி எவர் க்ரீனோ அதேபோல்தான் கவுண்டமணி - சத்யராஜ் காம்போ. இருவருமே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என்னவோ நக்கலும், நையாண்டியும் இயற்கையாகவே அவர்களுக்கு வாய்த்திருக்கிறதுபோல என்று ரசிகர்கள் கூறுவார்கள். இருவரும் இணைந்து நடித்த பிரம்மா, முறைமாமன், நடிகன் என ஏராளமான படங்களின் காமெடி அட்டகாசமாக இருக்கும். அதிலும் நடிகன் படத்தில் இருவரும் இணைந்து அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.
சத்யராஜ் பேட்டி: இந்நிலையில் சத்யராஜ் நடிகன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “கவுண்டமணிக்கு பல வசனங்களை நான் சொல்லியிருக்கிறேன். நீ இந்தப் பொண்ணை இதுக்கு முன் பார்த்ததே இல்லைல.. இது உலக மகா நடிப்புடா சாமி போன்ற வசனங்களை நான் சொன்னேன். அதேபோல் கேப்மாரி, மொள்ளமாரியெல்லாம் தனித்தனியாதான் பார்த்திருக்கிறேன்.. ஆனா நீ எல்லாமே சேர்ந்த ஒருத்தன் என்று நான் தான் என்னைப் பார்த்து பேச சொன்னேன். அதற்கு அவரோ, 'நீ இந்தப் படத்தோட ஹீரோ உன்னை எப்படி நான் அப்படி சொல்ல முடியும்’ என கூறி முதலில் மறுத்துவிட்டார் அவர். அது எனது நடிப்பை பாராட்டி நீங்கள் பேசும் வசனம் என்று சொன்ன பிறகே கவுண்டமணி அந்த வசனத்தை பேசினார்” என்றார்.


Click it and Unblock the Notifications











