»   »  சத்யராஜ் - அடுத்து எம்.ஜி.ஆர்!

சத்யராஜ் - அடுத்து எம்.ஜி.ஆர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sathyaraj with Archana
தந்தை பெரியார் வேடத்தில் கலக்கிய சத்யராஜ் அடுத்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த வாய்ப்பை தனக்குக் கொடுத்தால் சம்பளம் கூட வாங்கிக் கொள்ளாமல் நடிக்க தயாராக இருப்பதாக 'சின்ன வாத்தியார்' சத்யராஜ் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் சத்யராஜ். தனது படங்களில் எம்.ஜி.ஆரின் சாயல் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்வது சத்யராஜின் வழக்கம். மகா நடிகன் படத்தில் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் வந்து ஒரு காட்சியில் கலக்கியிருப்பார். அச்சு அசல் எம்.ஜி.ஆர். போலவே இருந்த சத்யராஜின் அந்த கெட்டப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சத்யராஜ் கூறியுள்ளார்.

சத்யராஜ், மேகா நாயர் நடித்துள்ள தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் படப் பாடலான பூ மழை தூவி .. ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காட்சி, பத்திரிக்கையாளர்களுக்காக போட்டுக் காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யராஜ் பேசுகையில், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அது எல்லோருக்கும் தெரியும். பெரியார் படம் போல, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை யாராவது படம் எடுக்க முன்வந்தால், அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். சம்பளம் பெறாமல் நடிக்க நான் தயார் என்றார்.

தங்கம் படத்தில் சத்யராஜுடன் சேர்ந்து கலக்கியிருக்கிறார் கவுண்டமணி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஜோடி போட்டு சவுண்டு விட்டுள்ளனர். அதிலும் சத்யராஜை விட கவுண்டரின் சத்தம்தான் சத்தாகவும், சத்தமாகவும் இருக்கிறதாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அசத்தியுள்ளாராம் கவுண்டமணி.

தனக்கே உரிய நக்கல், நையாண்டி, ரவுசு, லொள்ளு என சகல ஆயுதங்களையும் கலக்கலாக பயன்படுத்தி பின்னி எடுத்திருக்கிறாராம் கவுண்டர். இதனால் பல சீன்களில் ஹீரோ சத்யராஜா, கவுண்டரா என்ற சந்ேதகம் வருமாம்.

இதை சத்யராஜே ஒப்புக் கொண்டார். அவர் கூறுகையில், கவுண்டமணியுடன் பல காட்சிகளில் நான் சும்மாதான் வந்து போயிருக்கிறேன். காரணம், நகைச்சுவை மன்னனான கவுண்டமணிக்கு முன்பு ஒருவர் நடிப்பது என்பது மிகவும் சிரமமானது. அதனால்தான் நான் பெரும்பாலான காட்சிகளில் வெறுமனே வந்து போயிருக்கிறேன், கவுண்டரின் சேஷ்டைகளை ஒரு ரசிகனைப் போல ரசித்து சிரித்திருக்கிறேன் என்றார்.

நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற பாடல்தான் பூ மழை தூவி. தனது தங்கையின் கல்யாணத்தை கற்பனை செய்து எம்.ஜி.ஆர். பாடுவது போன்ற பாடல் அது. அந்தப் பாடலைத்தான், அதே சிச்சுவேஷனோடு இப்படத்தில் ரீமிக்ஸ் செய்துள்ளனராம்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ரீமிக்ஸ் ஆகியுள்ள பூமழை, ஒரிஜினல் பிளேவரோடு இல்லாவிட்டாலும் கூட ரசிக்கும்படி வந்திருக்கிறது.

Read more about: sathyraj

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil