ராம் சரண் கடின உழைப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்.. சிவராஜ்குமார் ஓபன் டாக்!
சென்னை: ராம் சரண் நடித்து, இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள கிராமத்து ஆக்ஷன் படமான "பெத்தி", ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இத்திரைப்படத்தில் ராம் சரண் தேசிய விருது வெல்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்களுடன் விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு 'பெத்தி'யைத் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஜூன் 4ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

"கௌர்நாயுடு" கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், படத்தின் கதை தன்னை கவர்ந்ததாகக் கூறினார். இவரது பாத்திரத்திற்கு தெளிவான நோக்கம், வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருந்ததால், இப்படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்றார். பெத்தி - கௌர்நாயுடு இடையிலான பாசமும் பந்தமும் ரசிகர்களைக் கவரும் எனத் தெரிவித்தார்.
ராம் சரணின் நடிப்பைக் குறித்துப் பெருமையாகப் பேசிய சிவராஜ்குமார், அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் கதாபாத்திரமாகவே வாழ்ந்து, மிக நேர்மையாக அவர் நடித்த அர்ப்பணிப்பும், உடல் மாற்றமும் ஈடு இணையற்றது என்றார்.
இயக்குனர் புச்சி பாபு சனா, கதைக்குத் தேவையான அனைத்தையும் திரையில் சிறப்பாகக் கொண்டு வந்ததாக சிவராஜ்குமார் பாராட்டினார். அவரது கதை சொல்லும் பாணி, மேக்கிங் தரம் அசத்தலானவை என்றார். ஜகபதி பாபு உள்ளிட்ட கதாபாத்திர வடிவமைப்புகளும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலுவின் காட்சிகளும் ரசிகர்களைக் கவரும் என்றும் தெரிவித்தார்.

பல விளையாட்டுகளை மையமாகக் கொண்ட "பெத்தி", ஒவ்வொரு விளையாட்டையும் கதையுடன் நெருக்கமாக இணைத்துள்ளது. கிளைமாக்ஸ் பல ஆச்சரியங்கள் நிறைந்த விருந்தாக அமையும் என்றார் சிவராஜ்குமார். "பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் சதீஷின் ஆர்வத்தையும், படத்தின் உயர்ந்த தயாரிப்புத் தரத்தையும் சிவராஜ்குமார் பாராட்டினார். தற்போது 'ஜெயிலர் 2', 'கும்மடி நரசய்யா' போன்ற படங்களில் நடித்து வரும் அவர், நல்ல கதைகள் கிடைத்தால் தெலுங்கு படங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
சிவராஜ்குமார் பகிர்ந்த இந்த தகவல்கள், "பெத்தி" திரைப்படம் குறித்த ரசிகர்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பை மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. அவரின் கருத்துகள் படத்தின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்ததால் இந்த ஆவல் கூடியுள்ளது.


Click it and Unblock the Notifications