ஜன. 11ல் 'சிவாஜி' வெள்ளி விழா

மிகப் பெரிய பட்ஜெட்டில் ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பில், ரஜினிகாந்த், ஷ்ரியா, விவேக், சுமன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான சிவாஜி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, 175 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டுள்ளது.
சிவாஜி படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்தப் படத்தால் பெரும் லாபம் கண்டுள்ளனர். வசூலை வாரி இறைத்த சிவாஜியின் வெள்ளி விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட ஏவி.எம். நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
100வது நாள் விழாவை ஏவி.எம். நிறுவனம் கொண்டாடவில்லை. இதனால் சர்ச்சை எழுந்தது. ஆனால் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்படும் என ஏவி.எம். நிறுவனத் தரப்பில் கூறப்பட்டது.
அதன்படி வருகிற 11ம் தேதி சிவாஜி படத்தின் வெள்ளி விழா சென்னை பல்கலைக்கழ நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது.
அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில், படத்தில் நடித்த கலைஞர்கள், பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி கேடயம் வழங்கி கெளரவிக்கிறார்.
விழாவில் ரஜினிகாந்த், ஷங்கர், ஏவி.எம். சரவணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கிறார்கள்.
முன்னதாக அன்று காலை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில், சிவாஜி படத்தை திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு ரஜினிகாந்த் கேடயம் வழங்கி பாராட்டவுள்ளார்.
விழாவின்போது சிவாஜி படம் உருவானது தொடர்பான முக்கால் மணி நேர குறும்படம் திரையிட்டுக் காட்டப்படவுள்ளது. சிவாஜி படத்தில் இடம் பெறாத, பல காட்சிகள் இதில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











