தமிழில் ஹீரோவாக களமிறங்கும் சிவராஜ்குமார்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: சிவராஜ்குமார் கர்நாடக திரையுலகில் ஃபேமஸான நடிகர் ஆவார். அங்கு அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது படங்கள் ரிலீஸானாலே திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். கடைசியாக அவர் கோஸ்ட் படத்தில் நடித்தார். தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது தமிழில் ஹீரோவாக களமிறங்கவிருக்கிறார் அவர்.
கர்நாடகத்தின் மிகப்பெரிய ஹீரோவான ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ்குமார். 1974ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீநிவாச கல்யாணா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 1986ஆம் ஆண்டு வெளியான ஆனந்த் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.முதல் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன.

முன்னணி ஹீரோ: ராஜ்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு ஆரம்பத்தில் சிவராஜ்குமார் அறியப்பட்டாலும் காலம் செல்ல செல்ல தனது திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். தொடர்ந்து அவர் நடித்த படங்களும் அதிரிபுதிரி ஹிட்டடிக்க கன்னட சக்கரவர்த்தி என்ற அந்தஸ்தையும் பெற்றார். இவரது தம்பிதான் மறைந்த ஹீரோ புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்: மாஸ் ஹீரோவாக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் வலம் வந்த அவர் ஓம் படத்துக்காக கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். அதேபோல் சிகிருடா கனாசு, ஜோஹி உள்ளிட்ட படங்களுக்காகவும் கர்நாடக மாநில அரசு விருதை பெற்றிருக்கிறார். இவை மட்டுமின்றி ஃபிலிம்பேர் விருதுகள், சைமா விருதுகளை வென்று அசத்திய சிவராஜ்குமார் நன்றாக பாடக்கூடியவரும்கூட.
தமிழில் சிவராஜ்குமார்: கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டில் என் ட்ரி ஆனார். படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் அவரது காட்சிகளுக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஜெயிலர் மட்டுமின்றி தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். அதிலும் அவரது நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.
கோஸ்ட்: இதற்கிடையே அவர் நடித்திருந்த கோஸ்ட் படம் கடந்த வருடம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸானது. லியோ படத்துக்கு போட்டியாக களமிறங்கிய அந்தப் படத்தை எம்.ஜி.சீனிவாஸ் இயக்கியிருந்தார். சிவராஜ்குமாருடன் ஜெயராம், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் 30 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.
தமிழில் ஹீரோ: இந்நிலையில் சிவராஜ்குமார் தமிழில் நேரடியாக ஹீரோவாக களமிறங்கவிருக்கிறார். அதன்படி ஈட்டி, ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இந்தப் படத்தை இயக்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்துக்கு ஜாவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











