சிம்பு படம் ரெடியாக இத்தனை வருஷம் ஆகுமா?.. வெற்றிமாறன் சொன்னதை கவனிச்சீங்களா?.. பாவம் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் சிம்புவை வைத்து பிரம்மாண்டமாக படம் எடுக்க இயக்குநர் தேசிங் பெரியசாமி பல மாதங்களாக காத்திருக்கும் நிலையில், பார்க்கிங் படத்தின் இயக்குநர் படத்தை குறுகிய காலத்தில் எடுத்துவிட்டு அந்த படத்துக்கு சிம்பு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு இணைந்துள்ள நிலையில், இந்த படம் உருவாக எத்தனை மாதங்கள் ஆகும் என்பது குறித்து வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சூரியை வைத்து விடுதலை படத்தை ஆரம்பித்த வெற்றிமாறன் அந்த படத்தையே சில வருடங்களாக எடுத்து முடித்தார். மேலும், சொன்ன பட்ஜெட் ஒன்று கடைசியில் எடுத்து முடிக்கும் போது ஆன செலவு வேறு என அவரே ஓபனாக பேசியிருந்தார்.

விடுதலை 2ம் பாகமும் விஜய் சேதுபதியின் கதையை வைத்து தேவையில்லாமல் நீட்டி முழக்கி எடுக்கப்பட்டு பெரிதாக பிசினஸ் ஆகவில்லை. இந்நிலையில், சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது எடுத்துக் கொள்ளும் என விவாதங்கள் சமூக வலைதளத்தில் கிளம்பியுள்ளன.
தக் லைஃப் தோல்வி: மாநாடு படத்துக்குப் பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றன. வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை தொடர்ந்து மணிரத்னம் இயக்கதில் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த தக் லைஃப் திரைப்படமாவது சிம்புவை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படமும் படுதோல்வியை சந்த்த்துள்ளது. இந்நிலையில், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

16 மாதங்கள் ஆகும்: வாடிவாசல் படம் எடுக்கப் போகிறேன் என அறிவித்து பல வருடங்கள் ஆகியும் இன்னமும் அதற்கு காரணம் மட்டுமே வெற்றிமாறன் கூறி வருகிறார். இந்நிலையில், சிம்புவை வைத்து அவர் இயக்கும் படங்கள் இன்னும் 10 மாத காலத்திலோ, அல்லது 12 மாத காலத்திலோ அல்லது 16 மாத காலத்திலோ படம் எந்தளவுக்கு ஷேப்பாகி வருகிறதோ அதை பொறுத்து வெளியாகும் என்றும் சரியான திட்டமிடல் இல்லாமல் வெற்றிமாறன் பேசியுள்ளது சிம்பு ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக வெற்றிமாறன் படங்கள் ஹிட்டடிக்காத நிலையில், இன்னும் 2 வருடங்கள் கழித்து தான் சிம்புவின் படம் வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அதிகபட்சமாக 2027ம் ஆண்டு தான் படம் வெளியாகும் என தெரிகிறது என்று கூறுகின்றனர்.
சிம்புவின் 50வது படம் என்ன ஆகும்?: சிம்புவின் 49வது படமாக வடசென்னை யூனிவர்ஸ் படம் உருவாகவுள்ள நிலையில், தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 50வது படம் மற்றும் டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படங்கள் எல்லாம் எப்போது ஆரம்பித்து, எப்போது வெளியாகும் என்பதே பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது என்கின்றனர். நடிகர் தனுஷை போல சிம்புவும் பல படங்களை ஒரே நேரத்தில் ஆரம்பித்து நடித்தால் மட்டுமே சீக்கிரம் அவரது படங்கள் வெளியாகும் என்றும் ஆனால், வெற்றிமாறன் படத்திற்குள் அவர் சென்று விட்டால், அதற்கும் வாய்ப்புகள் குறைவு என்றே கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே சிம்புவின் கம்பேக்கிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications