மணிரத்னத்தை பாராட்டியது போல வெற்றிமாறனை பாராட்டுவாரா சிம்பு?.. பாவம் ’பார்க்கிங்’ இயக்குநர்!
சென்னை: ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49 வது படம் உருவாகும் என முடிவு செய்து படத்தின் பூஜை எல்லாம் போடப்பட்ட நிலையில், தற்போது அந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், உடனடியாக நடிகர் சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் சேர்ந்திருப்பது தமிழ் சினிமாவை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே சிம்புவிடம் கதை சொல்லி அவரது ஐம்பதாவது படத்தின் இயக்குநரான தேசிங் பெரியசாமி பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், இந்த ஆண்டு டிராகன் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 51 வது படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

அவர்கள் இருவரையும் காக்க வைத்து விட்டு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள நிலையில், வடசென்னை 2ம் பாகம் படமாக அது உருவாகு போகிறதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. மேலும், தக் லைஃப் புரமோஷனின் போது மணிரத்னத்தை சிம்பு பாராட்டியது போல வெற்றிமாறனையும் அவர் பாராட்டுவாரா என்கிற கேள்விகளும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளன.
பார்க்கிங் இயக்குநர் பாவம்: ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வெளியான பார்க்கிங் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து கல்லூரி பின்னணியில் ஒரு படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு, பல வருடங்கள் கழித்து அந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம் நடிக்க போவதாகவும் கயாடு லோஹர் ஹீரோயின் என்றும் பட பூஜையை போடப்பட்டது. ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுக்குப் பிறகு, எல்லாமே தலைகீழாக தற்போது அந்த படத்தில் இருந்து சிம்பு வெளியேறிவிட்டார் என்கின்றனர். ஆனால், இதுதொடர்பாக இதுவரை படக்குழு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், வட சென்னை 2 அடுத்த ஆண்டு ஆரம்பிக்கும் என தனுஷ் தெரிவித்திருந்தார். வாடிவாசல் படம் தொடர்ந்து குழப்பத்திலேயே உள்ள நிலையில், சிம்புவை வைத்து உடனடியாக வெற்றிமாறன் படப்பிடிப்பையே தொடங்கி விட்டார் எனக் கூறுகின்றனர். புது கெட்டப்பில் லுங்கி உடன் சிம்பு இருக்க அவருடன் அருகே ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் உள்ளதை பார்த்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் கிளம்பியுள்ளது. வேட்டை மன்னனும், வெற்றிமாறனும் சிம்புவுக்காக இணைந்து விட்டார்களா எனக் கூறி வருகின்றனர்.
மணிரத்தினத்தை பாராட்டியது போல: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் சிம்புவுக்கு மிகப்பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும் டிசாஸ்டர் படமாக அந்த படம் மாறியது. அந்த படத்தின் புரொமோஷனின்போது, மணிரத்னம் போல இயக்குநர்கள் சொன்ன நேரத்தில் படத்தை ஆரம்பித்து, சரியாக எடுத்து, ரிலீஸ் செய்தால், அவர்கள் காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால், நான் லேட்டாக வரமாட்டேன் என்றார்.
வெற்றிமாறன் ஸ்டைல்: ஆனால், வெற்றிமாறன் ஸ்டைல் அப்படி இல்லை. ஒரு படம் எப்படி வரவேண்டும் என நினைக்கிறாரோ அது வரும் வரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மெனக்கெடுவார். விடுதலை மற்றும் விடுதலை 2 படங்களுக்கு அவர் செலவழித்த காலம் மற்றும் பட்ஜெட் பெரியது. இந்நிலையில், சிம்பு - வெற்றிமாறன் இணையும் படம் சீக்கிரமாக நிறைவடையுமா? அல்லது கால தாமதம் ஆகுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. எப்படி இருந்தாலும், சிம்புவுக்கு தரமான படமாக அமையும் என்றும் தேசிய விருது கிடைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











