அரசியல் பேச புது வித்தை கற்க வெளிநாட்டிற்கு செல்லும் சிம்பு
சென்னை: மாநாடு படத்தில் அரசியல் பேசப் போகும் சிம்பு புது வித்தை கற்கப் போகிறாராம்.
2018ம் ஆண்டு சிம்புவுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அவர் நடிப்பில் வெளியான செக்கச் சிவந்த வானம் படம் ஹிட்டானது. அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் என்று பலர் இருந்த போதிலும் சிம்பு தனது நடிப்பால் தனித்து நின்றார்.
அந்த படத்தை அடுத்து அவர் சுந்தர் சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

சுந்தர் சி.
வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு நிறைவடையாததால் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. ஒரு பாடலை இன்னும் படமாக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அந்த பாடலை படமாக்கிவிட்டு படப்பிடிப்பை முடித்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மாநாடு
வந்தா ராஜாவாதான் வருவேன் பட வேலைகள் முடிந்த பிறகு சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். நிஜத்தில் அரசியல்வாதிகளுக்கு ஐடியா கொடுக்கும் அவர் படத்தில் அரசியல் பேசப் போகிறாராம். அதனாலேயே படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்பு
மாநாடு படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 3ம் தேதி துவங்க உள்ளதாம். பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த படத்திற்காக சிம்பு புது வித்தை கற்க உள்ளாராம்.

கலை
மாநாடு படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்க உள்ளாராம் சிம்பு. அதை முறைப்படி கற்க அவர் பாங்காக் செல்கிறாராம். மாநாடு படத்தில் சிம்புவுக்கு யார் ஜோடியாக நடிக்கிறார், இசையமைப்பாளர் என்பது உள்ளிட்ட எந்த விபரமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











