இப்போலாம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லல.. வேற சொல்லுது.. சிம்பு செம ஜாலி பேச்சு
சென்னை: சிம்பு தற்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அது அவரது ரசிகர்களிடையே உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது கைகளில் இப்போது மூன்று படங்கள் இருக்கின்றன. அவற்றை தேசிங்கு பெரியசாமி, ராம்குமார் பாலகிருஷ்ணன், அஷ்வத் மாரிமுத்து ஆகியோர் இயக்குகிறார்கள். சூழல் இப்படி இருக்க விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்தது. அதனையொட்டி ஜாலியாக பேசியிருக்கிறார் சிம்பு.
எஸ்டிஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு இடையில் சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் கம்பேக் கொடுத்த சிம்புவுக்கு மாநாடு மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களில் வெந்து தணிந்தது காடு படத்துக்கு சூப்பர் வரவேற்பும், பத்து தல படத்துக்கு சுமாரான வரவேற்பும் கிடைத்தது. தற்போது கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

பார்க்கிங் இயக்குநருடன்: இந்தப் படத்துக்கு பிறகு; பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் எஸ்டிஆர். பார்க்கிங் படத்தை இயக்கி வெகுவாக கவனம் ஈர்த்தவர் அந்த இயக்குநர். இரண்டு பேருக்குமிடையே இருக்கும் ஈகோவை மைய புள்ளியாக வைத்து மேக்கிங்கில் கலக்கியிருப்பார். இப்படி ஒரு அட்டகாசமான இயக்குநருடன் சிம்பு சேர்ந்திருப்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.
மற்ற படங்கள்: அதேபோல் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் சிம்பு நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. முதலில் கமல் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரது நிறுவனம் விலகிக்கொள்ள சிம்புவே இந்தப் படத்தை தயாரிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்தான் வெளியானது. பாகுபலி போல் பிரமாண்டமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார்.
சொன்னதை செய்த சிம்பு: இப்படி வரிசையாக லைனப்புகளை வைத்திருக்கும் சிம்புவை பார்த்து அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்திருகின்றனர். ஒரு விழாவில் அவர் பேசியபோது, இனி எனது ரசிகர்களை கஷ்டப்படுத்தமாட்டேன்; அவர்களை கஷ்டப்படவும் விடமாட்டேன் என்று சொல்லியிருந்தார். இப்போது சிம்புவின் வேகத்தை பார்த்த ரசிகர்கள்; எங்கள் எஸ்டிஆர் சொன்னபடியே செய்ய ஆரம்பித்திருக்கிறாரே. கண்டிப்பாக இனி சிம்புவின் ஃபார்ம் தொடரும் என்று மகிழ்ச்சியோடு கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
சிம்புவின் வீடியோ: இதற்கிடையே அவர் நடித்த சிறந்த படங்களில் ஒன்றான விண்ணைத்தாண்டி வருவாயா வெளியாகி நேற்றுடன் 15 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனையொட்டி நடிகரும், அந்தப் படத்தின் தயாரிப்பாளருமான விடிவி கணேஷுடன் இருந்தபடி சிம்பு பகிர்ந்திருக்கும் வீடியோவில், "விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை சூப்பர் ஹிட் செய்தீர்கள். படத்தின் டீம் அனைவருக்குமே நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அந்தப் படம் ஒரு மேஜிக்கலான படம்தான்" என்று கூறினார். அப்போது கணேஷோ சிம்புவை பார்த்து. 'இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா' என கேட்க; அதற்கு சிம்புவோ, 'இப்போலாம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லல; வேற சொல்லுது' என்று ஜாலியாக கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











