ரஜினியுடன் மோதும் சிம்பு.. தீபாவளிக்கு வெளியாகிறது மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தள்ளிப் போன படப்பிடிப்பு
இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா, டேனியல் போப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு பெரும் இழுபறிக்கு பின்னர் தொடங்கியது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஜூலை மாதம் படப்பிடிப்பு நிறைவு
கடந்த சில நாட்களாக ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டு படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. சமீபத்தில் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது.

கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து மாநாடு படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் முக்கிய அப்டேட் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பாட்டிலுக்குள் ராக்கெட் வெடி
இந்நிலையில் கூறியது போலவே படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் தீபாவளிக்கு மாநாடு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்ட்டரில் பாட்டிலுக்குள் ராக்கெட் வெடியை வைத்து தீபாவளிக்கு ரெடி என்பதை கூறியுள்ளனர்.

தீவாவளிக்கு ரிலீஸ் ஆகும் மாநாடு
வரும் தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இந்நிலையில் சிம்புவின் மாநாடு படம் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் தீபாவளி தினத்தில் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது என்ன புது டிவிஸ்ட்?
அதே நேரத்தில் நெட்டிசன்கள் சிலர், இது என்ன புது டிவிஸ்ட் என்றும் படத்திற்கு ஹைப் இல்லாததால் பெரிய படத்துடன் தங்களின் படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர். ரஜினி படத்துடன் தங்களின் படத்தை ரிலீஸ் செய்தால் தங்களின் படத்தை பற்றியும் பேசுவார்கள் என்ற எண்ணத்தில் அண்ணாத்த படத்துடன் மோதுவதாகவும் கூறி வருகிறார்கள்.

மாஸ்டருடன் மோதிய ஈஸ்வரன்
இன்னும் சிலர் விஜய்யின் மாஸ்டர் படத்துடன் ரிலீஸ் ஆன சிம்புவின் ஈஸ்வரன் படம் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்காதது குறித்தும் கூறி வருகின்றனர். நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனனின் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையும் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











