Thug Life - விலகிய துல்கர் சல்மான்.. தக் லைஃப் படத்தில் நடிக்கப்போவது இவரா?.. வேற மாதிரி இருக்குமே
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தக் லைஃப் படம் குறித்த புப்திய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் குறித்த அடுத்தக்கட்ட அப்டேட்டுகள் எதுவும் வரவில்லை. எனவே அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள்

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் நவம்பர் 6ஆம் தேதி படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருந்தனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் கமல் ஹாசன் வித்தியாசமான கெட் அப்பில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலகிய துல்கர்: சூழல் இப்படி இருக்க கால்ஷீட் பிரச்னை காரணமாக துல்கர் சல்மான் படத்திலிருந்து விலகியிருக்கிறார். அவர் மலையாளத்தில் சில படங்களிலும், தமிழில் சூர்யாவுடன் நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். தற்போது அந்தப் படங்களுக்கு கொடுத்த தேதியும், தக் லைஃப் படத்துக்கு கொடுத்திருந்த தேதியும் கிளாஷ் ஆனதால் இப்படத்திலிருந்து விலகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சிம்பு: இந்நிலையில் தக் லைஃப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி துல்கர் சல்மான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தையை படக்குழு தொடங்கியிருப்பதாகவும்; சிம்பு நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் ஏற்கனவே கமல் ஹாசன் தயாரிப்பில் தனது 48ஆவது படத்தில் நடித்துவருகிறார் சிம்பு; அதுமட்டுமின்றி மணிரத்னத்தின் இயக்கத்திலும் செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்தார். எனவே கண்டிப்பாக சிம்பு இந்தப் படத்துக்கு ஒத்துக்கொள்வார் என திரைத்துறையினர் கணித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











