சிம்பு - அஸ்வத் மாரிமுத்து இணையும் படம்.. ஷூட்டிங் எப்போது தொடங்குது தெரியுமா?
சென்னை: எஸ்டிஆர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதன்முறையாக கமலுடன் அவர் இணைந்து நடித்திருப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் பட்டையை கிளப்பியது. அதிலும், 'இனிமேல் நான்தான் இங்க ரங்கராய சக்திவேல்' என்று எஸ்டிஆர் சொல்வதை பார்த்த அவரது ரசிகர்கள் கண்டிப்பாக படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
டி.ராஜேந்தரின் மகனான சிம்பு சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர். நடிப்பு மட்டுமின்றி இள வயதிலேயே மன்மதன், வல்லவன் ஆகிய படங்களையும் அவர் இயக்கினார். அதேபோல் பாடல்கள் பாடுவது, எழுதுவது, இசையமைப்பது என சினிமாவில் இருக்கும் பெரும்பான்மையான ப்ளாட்பார்ம்களில் தனது தடத்தை அழுத்தமாக பதித்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலிவுட்டில் அதீத திறமை பெற்றவர்களில் ஒருவர் என்கிற பெயரையும் அவர் எடுத்திருக்கிறார்.
சிம்பு எடுத்த பிரேக்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிம்புவுக்கு இடையில் இரண்டு காதல் தோல்விகள் அரங்கேறின.நயனுடனான பிரேக்கப்புக்கு பிறகு அவர் நடித்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்கு பிறகு அவரது சிந்தனைகள் எல்லாம் ஆன்மீகம் பக்கம் சென்றது. மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் சில பிரச்னைகள், உடல் எடை அதிகரித்தல் என சிம்புவால் ஒருமித்த கவனத்தோடு சினிமாவை அணுக முடியவில்லை. இதன் காரணமாக இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்தார்.

சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸ்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, உடல் எடையை குறைத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதில் அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அந்த வெற்றிகள் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக மீண்டும் பழைய சிம்புவாக மாறி தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர். எனவே அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட வைபில் இருக்கிறார்கள்.
செம லைன் அப் வைத்திருக்கும் சிம்பு: சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போதைய தமிழ் சினிமாவின் பல்ஸை தெரிந்துகொண்டு சரியாக இளம் இயக்குநர்களுடன் அவர் கைகோர்த்திருப்பது ஆரோக்கியமான ஒன்றே. எனவே வின்டேஜ் சிம்புவை இனி பார்க்கலாம் என்கிற நம்பிக்கை திரைத்துறையில் பிறந்திருக்கிறது.
தக் லைஃப்: இதற்கிடையே அவர் மணிரத்னம் - கமல் இணைந்திருக்கும் தக் லைஃப் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரை பார்த்த எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் ட்ரெய்லரை பார்க்கையில் கண்டிப்பாக திரைப்படத்தில் சிம்புவுக்கு முக்கியமான ரோலை கொடுத்திருக்கிறார்கள் என்பதும்; ஏகப்பட்ட மாஸ் மொமண்ட்ஸும் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஷூட்டிங் எப்போது?: இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்துவுடன் சிம்பு இணைந்திருக்கும் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருட கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தில் அஸ்வத் இயக்கியிருந்த டிராகன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே சிம்புவும், அவரும் இணையும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











