ஒரே ஃபார்முலாவை பின்பற்றும் சிவகார்த்திகேயன்.. அடுத்த பட டைட்டில் இதுவா?
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. ஷூட்டிங்கும் மும்முரமாக நடந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க ஏ.ஆர்.முருகதாஸுடன் சிவா இணைந்திருக்கும் படத்தின் பெயர் நாளை எஸ்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோலிவுட்டின் கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான், மாவீரன், அயலான் என வரிசையாக ஹிட் கொடுத்த அவர்; அமரன் படத்தின் மூலம் 300 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெயரை பெற்றுவிட்டார். அந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருந்தார். உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய்வரை வசூலித்தது. திரையரங்குகளிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் வெற்றி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பராசக்தி: அமரன் படத்தை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதில் ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். அமரன் எப்படி தன்னுடைய கரியரை உச்சத்துக்கு கொண்டு சென்றதோ அதேபோல் பராசக்தியும் கொண்டு போகும் என்கிற நம்பிக்கையில் எஸ்கே இருக்கிறார். இந்தப் படத்தை புறநானூறு என்ற பெயரில் சூர்யாவை வைத்துதான் முதலில் சுதா இயக்கவிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
முருகதாஸுடன் கூட்டணி: இதற்கிடையே இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்தார் சிவா. படத்தின் ஷூட்டிங் மிகவும் மும்முரமாக நடந்தது. ஆனால் சல்மான் கானை வைத்து முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தின் வேலைகளை தொடங்க சொல்லி அவருக்கு ப்ரெஷர் வந்ததாகவும்; அதன் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அவர் மும்பை பறந்துவிட்டார் என்று தகவல்கள் தொடர்ந்து பரவின. தற்போது ஷூட்டிங் மீண்டும் தொடங்கவிருப்பதாகவும்; இன்னும் சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆருக்கு முக்கியமான படம்: சிவகார்த்திகேயன் போலவே முருகதாஸும் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஏனெனில் அவர் கடைசியாக எப்போது ஹிட் படம் கொடுத்தார் என்று அவரிடம் கேட்டால் அவருக்கே பதில் தெரியாது. அவ்வளவு காலம் ஆகிவிட்டது முருகதாஸ் ஹிட் கொடுத்து. நிச்சயமாக இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்து; தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் கடுமையாக இயக்குநர் உழைத்துவருவதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
நாளை படத்தின் பெயர்: இந்நிலையில் சிவகார்த்திகேயன் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி சிவாவும், ஏ.ஆர்.முருகதாஸும் இணையும் படத்தின் பெயர் நாளை வெளியிடப்படும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு சிகரம் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அமரன், மாவீரன் என பழைய படங்களின் டைட்டிலில்தான் சிவா நடித்துவருகிறார். தற்போது இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் எஸ்கே ஏன் ஒரே ஃபார்முலாவை பின்பற்றுகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











