Amaran: அப்பாதான் எல்லாமே! அமரன் வெற்றி விழாவில் அழுத சிவகார்த்திகேயன்.. இவ்வளவு வலியோட இருக்காரே!
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அமரன். இப்படம் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டினைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இதற்கு முன்னர் இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் விமர்சனம் மற்றும் வசூல் வெற்றிப் படமாக மாறியுள்ளது. படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசியது பலரையும் கலங்க வைத்தது. அதுகுறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே கூறியதைப்போலத்தான் அமரன் படம் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. படம் பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக சாய் பல்லவி தான் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிறப்பாக நடித்துள்ளார் என அனைவரும் பாராடுகின்றனர். இது மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயனின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை பலம் சேர்ப்பதாகவும் உலகநாயகன் கமல்ஹாசன் உள்பட பலரும் பாராட்டுகின்றனர்.

இந்நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது பலரையும் கண் கலங்கவைத்தது. குறிப்பாக அவர் பேசும்போது, “ மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு நன்றி. அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அமரன் படம் உருவாகி இருக்காது. மேலும் படத்தினைப் பார்த்த பலரும் ஒரு இடத்தில்கூட சிவகார்த்திகேயனைப் பார்க்க முடியவில்லை எனக் கூறுகின்றனர்.
சிவகார்த்திகேயன்: அனைவருக்கும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை குறித்து தெரியும். ஆனால் யாருக்கும் எனது அப்பா ஜெய்லர் போஸ் குறித்து தெரியாது. இந்தப் படத்தினை நான் எப்படியாவது எடுக்கவேண்டும் என்ற உந்துதலுக்கு காரணமே அவர்தான். எப்போதும் மிடுக்கான சீருடையில் இருப்பார். இப்போதுவரை அவர் குறித்து பல்வேறு விஷயங்களைக் கேள்விப்பட்டுக்கொண்டு வருகின்றேன். கடந்த 21 ஆண்டுகளாக அவருடனான நினைவுகளுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டு உள்ளேன். இந்தப் படத்தின்மூலம் நான் அவராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் எனது அப்பாவைப்போல் இந்தப் படத்தில் இருக்க முயற்சித்தேன்.
உடைந்த எலும்புகள்: முகுந்த் சாருக்கும் எனது அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. எனது அப்பா இறந்ததில் இருந்து எனது மொத்த வாழ்க்கையும் மாறிவிட்டது. அவரது இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், அப்பாவின் உடைந்த எலும்புகளைப் பார்த்தேன். அப்போது 17 வயது பையனின் வாழ்க்கையும் உடைந்துவிட்டது. இன்றைக்கு அமரன் மூலம், உடைந்த எலும்புகளை ஒட்டி என்னை ஆளாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. அமரன் படத்தின் க்ளைமேக்ஸும் எனது வாழ்க்கையும் ஒன்றுதான்
கண்ணீர்: அமரன் படத்தினைப் பார்த்துவிட்டு முதலமைச்சர் பாராட்டுகின்றார், துணை முதலமைச்சர் பாராட்டுகின்றார். நீங்கள் அனைவரும் என்னைப் பாராட்டுகின்றீர்கள். இப்படியான இடத்தினை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. ” எனக் கூறினார். அப்போது சிவகார்த்திகேயன் கண்கள் கலங்கியதால் அங்கு கூடியிருந்த பலரும் அழுதனர்.


Click it and Unblock the Notifications











