Sivakarthikeyan - தம்பி முதலில் அதை மாத்துப்பா.. ரசிகருக்கு அட்வைஸ் செய்த சிவகார்த்திகேயன்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். ஏலியன் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மொத்தம் 75 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ரசிகர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பதிலளித்தனர்.
சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று பிறகு வெற்றியாளராக மாறி தொகுப்பாளராக ஜொலித்தவர் சிவகார்த்திகேயன். இவரது லுக்கையும், டைமிங்கையும் பார்த்த தனுஷ் தனது 3 படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்தது.

சிறுவர், சிறுமிகளை கவர்ந்த சிவா: தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்கள் ஹிட்டாக சிறுவர்களையும், சிறுமிகளையும் கவர்ந்த ஹீரோவாக வளர்ந்தார் சிவா. கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் தற்போது தெளிவாக பயணம் செய்துகொண்டிருக்கிறார். மேலும் அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாயை வசூலித்து சிவகார்த்திகேயனை டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் நிறுத்தியது.
அடிவாங்கிய பிரின்ஸ்: இரண்டு படங்கள் தொடர்ந்து 100 கோடி ரூபாய் வசூலித்த உற்சாகத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தலாம் என்ற நோக்கத்தில் நடித்த பிரின்ஸ் படம் பெரும் தோல்வி அடைந்தது. அவரது கரியரில் சீமராஜா என்ற மிகப்பெரிய தோல்வி படத்துக்கு பிறகு பிரின்ஸ் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. தோல்வியோடு மட்டுமின்றி ஒரு வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.
அயலான்: அதனையடுத்து அவர் நடித்த மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது இதன் காரணமாக பிரின்ஸில் விட்டதை மாவீரனில் பிடித்துவிட்டதாக எஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூற ஆரம்பித்தனர். இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்தார் சிவகார்த்திகேயன். ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் பெரும் தாமதத்துக்கு பிறகு கடந்த 12ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்திருக்கிறது.
வசூல் வேட்டை: இந்த பொங்கல் ரேஸ் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமானதாகவே கருதப்பட்டது. ஏனெனில் அயலான் திரைப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தனுஷால் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். எனவே இதில் தனுஷை சிவா வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் வென்றுவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் அயலான் திரைப்படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.
ரசிகருக்கு அட்வைஸ்: இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட அயலான் படக்குழுவினர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது ஒரு Unlucky அஜித் என்ற பெயரில் ஒரு ரசிகர், 'ஏலியன்க்கு கூட ஆள் இருக்கு. நான் இன்னும் சிங்கிளாவே இருக்கேன்’ என்று கூறியிருந்தார். அதற்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன், 'தம்பி முதலில் அந்தப் பெயரை மாத்துப்பா’ என்று குறிப்பிட்டிருந்தார். அதனை ஆமோதிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மானும் எஸ்கேவின் ரிப்ளைக்கு சிரிப்பு ஸ்மைலியை தட்டிவிட்டிருந்தார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











