இந்தியன் 2.. சிக்கிய சித்தார்த்.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன்?.. எஸ்கே ரசிகர்கள் நிம்மதி
சென்னை: கமல்ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருந்த சூழலில் படமானது பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பலத்த சேதாரம் ஆகிவிட்டது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது படம். அங்கும் வைத்து செய்கிறார்கள் நெட்டிசன்கள்.
சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த கமல் ஹாசன் இடையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கவனம் செலுத்தினார். ஆனால் உலக நாயகன் எதிர்பார்த்தபடி அரசியல் களத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டுவரும் அவர், மீண்டும் சினிமாவை கவனிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து தனது ரீ எண்ட்ரியை தரமாக கொடுத்தார் அவர்.

இந்தியன் 2: படம் மெகா ஹிட்டானதை அடுத்து; நின்றுபோன இந்தியன் 2 படத்தின் பணிகளும் தூசு தட்டப்பட்டன. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் இந்தியன் 2 ஷூட்டிங் நின்று போயிருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் இந்தியன் 2வில் நடிக்க ஆரம்பித்தார். ஷங்கரும் முழுமூச்சாக இறங்கி வேலை செய்தார். இதில் கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
படம் ரிலீஸ்: இந்தியன் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இரண்டாம் பாகத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்போடு கடந்த ஜூலை 12ஆம் தேதி ரிலீஸான படத்தை ரசிகர்கள் பார்க்க சென்றனர். படத்தின் முதல் காட்சியிலிருந்தே இந்தியன் 2வுக்கு நெகட்டிவ்வான விமர்சனங்களே பெரும்பாலும் கிடைத்தன. பேசாமல் இந்தப் படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம் என்று ஓபனாக பேச ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.
20 நிமிடங்கள் கட்: அதிலும் ஷங்கர் இந்தப் படத்திலும் தனது வழக்கமான டெம்ப்ளேட்டைதான் பயன்படுத்தியிருக்கிறார். அனிருத்தின் இசை எல்லாம் ஒன்றுமே இல்லை. முக்கியமாக தொழில்நுட்பங்கள் பெரிதாக வளராத காலத்திலேயே கமல்ஹாசனுக்கு இந்தியனில் அருமையாக மேக்கப் போட்டிருந்தார்கள். இப்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்தும் கமலின் மேக்கப் சொதப்பிவிட்டது என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இப்படி விமர்சன ரீதியாக அடி வாங்கிய இந்தியன் 2 வசூல் ரீதியாகவும் சொதப்பியிருக்கிறது.
வைத்து செய்யும் நெட்டிசன்கள்: இந்தச் சூழலில் படமானது சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகு படத்தின் மீதான ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்திருக்கின்றன. இதனால் படக்குழு உச்சக்கட்ட அப்செட்டில் இருப்பதாகவும்; இந்தியன் 3யை இன்னும் சிறப்பாக கொடுக்க ஷங்கர் பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தப்பிய சிவகார்த்திகேயன்: படம் ஓடிடியில் வெளியான பிறகு சித்தார்த்தையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. முக்கியமாக படத்தில் அவர் பேசும், 'சித்ரா அரவிந்தன் சோஷியல் மீடியா', GO Back Indian ஆகிய வசனங்களை அவர் பேசும் காட்சிகளை வெட்டி எடுத்து சித்தார்த்தை பங்கம் செய்துவருகிறார்கள். இந்நிலையில் சித்தார்த் ரோலில் சிவகார்த்திகேயன் தான் முதலில் நடிக்கவிருந்ததாம் . அவரும் ஒத்துக்கொள்ளும் மனநிலையில்தான் இருந்தார் என்றும்; ஆனால் அந்த சமயத்தில் அவர் கைவசம் இரண்டு படங்கள் இருந்ததால் அதிலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், நல்லவேளை சிவகார்த்திகேயன் நடிக்கல. தப்பிச்சிட்டாரு என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











