விஜய் சார் ஜெயிச்சதுமே போன் செய்தேன்.. அடடே இப்படி எல்லாம் நடந்துச்சா.. சிவகார்த்திகேயன் ஓபன்
மதுரை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படம் சேயோன். சிவக்குமார் முருகேசன் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு மே 18ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது என்று படக்குழு அறிவித்திருந்தது. இப்படி இருக்கையில் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்தது.
மதுரையில் சேயோன் படத்தின் படப்பிடிப்புக்காக வந்தவரை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது, " மதுரைக்கு என்று ஒரு பவர் உள்ளது, அந்த பவர் குறையாமல் சேயோன் இருக்கும். இப்படி முழுக்க முழுக்க கிராமப் படம் செய்து வெகு நாட்கள் ஆகிவிட்டது, தற்போது நமது தாய் கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசனுடன் இணைந்து படம் பண்ணுகிறேன். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

சிவகார்த்திகேயன்: முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது ஆட்சி குறித்த கேள்விக்கு, " எங்கள் துறையில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆகி உள்ளார். மகிழ்ச்சியாக உள்ளது. அவர் வென்றதுமே அன்றைய தினத்திலேயே அவருக்கு போன் செய்தேன், அவர் எப்போதும் போல வழக்கமான அமைதியுடன், ' சொல்லுப்பா, நல்லா இருக்கீங்களா என்று கேட்டுவிட்டு, வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். அவர் எதைச் செய்தாலும் சிறப்பாகத்தான் செய்வார் என்று நம்புகிறேன். அந்த வகையில் அவரது முதலைமைச்சர் பணியும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்" என்று பதில் அளித்தார்.
ஜன நாயகன்: அவரது இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் மோதுவதாக இருந்தது. ஆனால் ஜன நாயகன் படத்திற்கு வெளியீட்டு சான்றிதழ் கிடைக்காததால், படம் இதுவரை வெளியாகாமல் உள்ளது. ஜன நாயகன் படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டைட்டில் கார்டில் முதலமைச்சர் விஜய் என்று பெயர் போட்டு படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications