எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்.. உங்களுக்கும் ஒரு மாமனார் கிடைச்சிருக்காரு - சிவகார்த்திகேயன்!
சென்னை: நேசிப்பாயா படத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்ற போது நடிகை நயன்தாரா பில்லா இயக்குநர் விஷ்ணு வர்தனுக்காக புரமோஷனுக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா, அதர்வா, சரத்குமார், அதிதி ஷங்கர் என நேசிப்பாயா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவே செம கலர்ஃபுல்லாக களைகட்டியது. சிவகார்த்திகேயனை அழைத்ததும் மறுப்பேதும் சொல்லாமல் வந்து நிகழ்ச்சியை சிறப்பாக மாற்றியதற்காக படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன் முதல் மாவீரன் படத்தில் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கர் வரை நன்றி மழை பொழிந்துவிட்டனர்.

மேடை ஏறி பேசிய சிவகார்த்திகேயன் தனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். எனக்கு கிடைத்தது போல உங்களுக்கும் ஒரு சூப்பர் மாமா கிடைத்திருக்கிறார் என ஆகாஷ் முரளியையும் நேசிப்பாயா படத்தின் தயாரிப்பாளரையும் புகழ்ந்து பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
அதர்வா ரொம்ப ஹேப்பி: தமிழ் சினிமா ரசிகர்கள் எனக்கு எப்படி வெல்கம் பண்ணாங்களோ அதே அளவுக்கான வரவேற்பை என் தம்பிக்கும் கொடுத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. நிச்சயம் இவ்வளவு பெரிய இயக்குநர், இவ்வளவு பெரிய பேனரில் ஆகாஷ் அறிமுகம் ஆவது ரொம்பவே சந்தோஷம். நேசிப்பாயா படம் நிச்சயம் காதலர்களை மட்டுமின்றி குடும்ப ஆடியன்ஸையும் கவரும் என செம ஹேண்ட்ஸமாக நிகழ்ச்சிக்கு வந்த அதர்வா பேசினார்.
செம மாஸ் என்ட்ரி: சிவகார்த்திகேயன் பங்கேற்றது தான் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹைலைட்டான விஷயமே. ஏ.ஆர். முருகதாஸ், சுதா கொங்கரா என அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களுடன் களமிறங்கி வரும் சிவகார்த்திகேயன் மற்ற இளம் நடிகர்கள் படங்களுக்கும் தன்னால் முடிந்த சப்போர்ட்டை கொடுத்து வருகிறார். அமரன் படத்தின் மூலம் கடந்த ஆண்டு 350 கோடி வசூலை அள்ளி மாஸ் காட்டிய சிவகார்த்திகேயனை தற்போது கோலிவுட்டில் பலரும் தங்கள் படங்களின் புரமோஷன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருகின்றனர்.

பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்: ஆகாஷ் முரளி மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் மகளைத்தான் திருமணம் செய்துக் கொண்டார். தனது மருமகனை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்க நினைத்த சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு பெரிய பொருட்செலவில் விஷ்ணுவர்தனை வைத்து நேசிப்பாயா படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், நேற்று மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். பெரிய வேலையோ, சம்பளமோ இல்லாத எனக்கு என்னோட தாய் மாமன் மனோகர் தான் நம்பி பொண்ணு கொடுத்தார். எனக்கு கிடைத்தது போல ஒரு நல்ல மாமனார் உங்களுக்கு கிடைத்துள்ளார். பொண்ணையும் கொடுத்து படத்தையும் கொடுத்திருக்கிறார் என சிவகார்த்திகேயன் கூற அரங்கமே அதிர்ந்து விட்டது.
4500 ரூபாய் தான் சம்பளம்: நான் வேலை பார்த்த காலத்தில் ஒரு ஷோவுக்கு விஜய் டிவி எனக்கு 4500 ரூபாய் தான் சம்பளம் கொடுக்கும். ஆனால், இப்போ விஜய் டிவி வளர்ந்துடுச்சு, பாலா எல்லாம் ஒரு ஷோவுக்கே லட்சக் கணக்கில் சம்பாதிப்பார் போலத் தெரிகிறது. லட்சக் கணக்கில் சம்பாதிக்கவில்லை என்றாலும், மாப்பிள்ளை கனவை நோக்கி ஓடுறான். சென்னைக்குப் போய் வாழ்றதே பெரிய விஷயம் என நம்பி அவரோட மகளான ஆர்த்தியை எனக்கு கட்டி வைத்தார் என சிவகார்த்திகேயன் பேசி மனைவிக்கும் மாமாவுக்கும் பெரிய ஐஸ் வைத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











