வெங்கட் பிரபுவை தொடர்ந்து டீலில் விடும் சிவகார்த்திகேயன்?.. அடுத்த படம் இதுவா?.. எஸ்கே எடுத்திருக்கும் முடிவு
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி திரைப்படம் கடந்த பத்தாம் தேதி ரிலீஸானது. பெரிய எதிர்பார்ப்புகளை சம்பாதித்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இப்படத்துக்கு பிறகு அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த படம் அது இல்லை என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இப்போது விண்ணளவு இருக்கிறது. பத்தே படங்களில் காணாமல் போய்விடுவார் என்றெல்லாம் ஆரூடம் கூறியவர்கள் இப்போது பேச முடியாமல் வாயடைத்து போயிருக்கிறார்கள். அதிலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதைத் தொடர்ந்து எஸ்கேவின் சம்பளமும் பன்மடங்கு எகிறியது. பெரிய இயக்குநர்களும் அவரை வைத்து படங்கள் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
எஸ்கேவின் பராசக்தி: அமரன் படத்துடைய வெற்றிதான் அவருக்கு பராசக்தி படம் அமைவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. சுதா கொங்கரா இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய இரண்டு படங்களையும் மெகா ஹிட்டாக கொடுத்த சுதா; கண்டிப்பாக பராசக்தியையும் அப்படியே கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக படத்தின் கதைக்களமும் ரசிகர்களிடையே பெரிய நம்பிகையை விதைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுமாரான வரவேற்பு: ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் பெரிய சம்பவத்தை எல்லாம் செய்யவில்லை. ரொம்பவே சுமார் ரகமாகத்தான் அமைந்தது. ராவான, அடர்த்தியான கதைக்களத்தை தன்னுடைய ஸ்டைலில் தருகிறேன் என்று மொத்தமாக சொதப்பி வைத்துவிட்டார் இயக்குநர் என்றுதான் படம் பார்த்த அனைவருமே கூறுகிறார்கள். விமர்சன ரீதியாக படம் கலவையான ரெஸ்பான்ஸை பெற்றிருந்தாலும்; வசூலில் நூறு கோடி ரூபாயை அள்ளிவிட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவித்தது.
வெங்கட் பிரபுவுடன் கூட்டணி: இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க சில வருடங்களுக்கு முன்பே கமிட்டாகிவிட்டார் சிவா. ஆனால் விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்தப் படத்தை ஒதுக்கிவிட்டு கோட் படத்தை இயக்கினார். அவர் அதை முடித்த சமயத்தில் எஸ்கே பராசக்தியில் பிஸியாக இருந்தார். இப்போது இரண்டு பேருமே ஃப்ரீயாகிவிட்டதால் உடனடியாக அப்படத்தின் வேலைகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் படம் உருவாகும் என தெரிகிறது.
புதிய ட்விஸ்ட்: ஆனால் இப்போது புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார் சிவா. அந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து அவருக்கு திரையிட்டு காண்பித்தார்களாம். படத்தை பார்த்து ரொம்பவே இம்ப்ரெஸ் ஆன எஸ்கே; அதன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும்; இதனை முடித்துவிட்டுத்தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. வெங்கட்டுடன் இணையும் படத்தின் ஷூட்டிங் முடிய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால்; குறுகிய கால படமாக இதில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











