திருமணத்தில் வந்த பிரச்னை.. சரியாக யோசித்த சிவகார்த்திகேயன்.. இல்லைனா நிலைமை மோசமாகிருக்கும்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக சேயோன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதனை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு படங்களின் மீதும் எஸ்கே ரசிகர்களுக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவகார்த்திகேயன் குறித்து தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அது ட்ரெண்டாகியுள்ளது.
இரா. சரவணன் தனது முகநூல் பக்கத்தில், "நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம்... அதற்கு முதல் நாள் பெண் அழைப்பு. கலந்துகொண்டேன். இரு கரம் நீட்டி வாஞ்சை காட்டும் நண்பரின் முகத்தில் அவ்வளவு மகிழ்வு இல்லை. திருமண வீட்டிற்கே உரிய எந்தக் கலகலப்பும் நிம்மதியும் அங்கு இல்லை. விசாரித்தபோது, பெண் வீட்டார் பெரிய அளவில் வசதியானவர்களாக இல்லாததுதான் மாப்பிள்ளை வீட்டார்க்குக் குறையாகப் பட்டிருக்கிறது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக மாப்பிள்ளை வீட்டார் குறைகூற, பெண் வீட்டார் சங்கடத்துடன் நின்றார்கள்.
சிவகார்த்திகேயனின் அழைப்பு: அந்த நேரத்தில் எனக்கோர் அழைப்பு. தம்பி சிவகார்த்திகேயன் வேறொரு விஷயத்திற்காக அழைத்திருந்தார். அவர் கேட்ட தகவல்களைச் சொன்னேன். கூடவே, நான் கலந்துகொண்ட நிகழ்வின் கவலையை அவர் கேட்காமலே சொன்னேன். இன்னும் வசதி வாய்ப்புகளையும் வரதட்சணையையும் வைத்து மதிப்பிடப்படுகிற பெண்களின் நெருக்கடி வாழ்வை தம்பியிடம் பகிர்ந்தேன். மணமகளின் பெயர் என்ன என்று கேட்டார். சொன்னேன். பிற விஷயங்களைப் பேசிவிட்டு நண்பரின் நிகழ்வுக்கு வந்தேன். பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. நான் நண்பரை அமைதிப்படுத்தினேன்.

சிவாவின் வாழ்த்து: சில நிமிடங்களில் என் அலைபேசிக்கு ஒரு வீடியோ பதிவு வந்தது. "அன்பு தங்கைக்கு, நான் சிவகார்த்திகேயன் பேசுறேன். உங்களுக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள். நீங்களும் மணமகனும் பெருவாழ்வு வாழனும். எல்லோருக்கும் முன்னுதாரணமான வாழ்வை நீங்க வாழப் போறீங்க. உங்க ஊர்ப் பக்கம் வர்றப்ப நிச்சயம் உங்க எல்லாரையும் சந்திக்கிறேன்" என வீடியோ பதிவு அனுப்பி இருந்தார் சிவகார்த்திகேயன். நான் சிலிர்த்துப் போனேன்.
எவ்வளவு பெரிய விஷயம்: உடனே மணமகளின் தந்தைக்கு அந்தக் காணொளியை அனுப்பினேன். அவர் அதைத் தன் மகளுக்குக் காட்ட, அடுத்த சில நிமிடங்களில் மணமகன் வீட்டார் அத்தனை பேருக்கும் அது பரவியது. அதுவரை நிலவிய குழப்பங்கள் போன இடம் தெரியாமல் போயின. "சிவகார்த்திகேயனே வாழ்த்தி இருக்கார்னா அது எவ்வளவு பெரிய விஷயம்..." என ஒருகட்டத்தில் மணப்பெண்ணைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது அந்தக் குடும்பம்.
பேரன்பின் அடையாளம்: நிமிடத்தில் சிவகார்த்திகேயன் யோசித்த விதம்தான் இதில் மிக முக்கியமானது. அந்தக் குடும்பத்தைப் பற்றிச் சொன்ன நான் அவரிடம் எந்த உதவியையும் கேட்கவில்லை. ஆனால், சட்டென யோசித்து அவர் செயல்பட்ட சமயோசிதம் மகத்தானது. இன்றைக்கு அந்தக் குடும்பம் பேரன்பின் அடையாளமாக ஜொலிக்கிறது. தம்பி சிவகார்த்திகேயனை பற்றி பேசுகிற போதெல்லாம் ஒவ்வொரு முறையும் நான் ஏன் சிலிர்க்கிறேன் என்றால், காரணம் பிறர் மீது அவர் காட்டுகிற இத்தகைய பேரன்பும் அக்கறையும்தான். தன்னால் ஏதாவது உதவ முடியுமெனில் அதைச் செய்துதான் பார்ப்போமே என்கிற மெனக்கிடல் அவருக்கு எப்போதுமே உண்டு" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











