அந்த விஷயத்தில் தனுஷ் ரேஞ்சில்தான் இருக்கிறார்.. சிவகார்த்திகேயன் பற்றி சீனியர் சொல்வதை கேளுங்க
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். அவரது நடிப்பில் வெளியான மதராஸி, அமரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. பராசக்தி சுமார் வரவேற்பை பெற்றது. இது ஒருபக்கம் இருக்க தனுஷுக்கு எதிராக எஸ்கே செயல்படுகிறார் என்ற பேச்சுக்களும் சமீபமாக அடிக்கடி எழுகின்றன. அதற்கு இரண்டு பேருமே அமைதியை மட்டுமே இப்போதுவரை பதிலாக கொடுத்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும், அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டும் இருந்த சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்து வந்தது தனுஷ். தான் ஹீரோவாக நடித்த 3 படத்தில் முக்கியமான ரோலை கொடுத்து; பிறகு அவரை ஹீரோவாக வைத்து எதிர்நீச்சல் திரைப்படத்தையும் தயாரித்தார். இரண்டு படங்களிலும் சிவாவுக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தது. அப்போதிருந்து அவர்கள் இரண்டு பேருமே உடன் பிறந்த சகோதரர்கள் போல்தான் பழகி வந்தார்கள்.

தனுஷுக்கும், சிவாவுக்கும் விரிசல்?: தொடர்ந்து தனது திறமையை வளர்த்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்த எஸ்கே இப்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறியிருக்கிறார். விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருப்பதால் அவர் இடத்தை சிவாதான் பிடிப்பார் என்று பலரும் ஆரூடம் கூறுகிறார்கள். எஸ்கேவும் அதற்கேற்றபடிதான் தனது கிராஃபை கொண்டு சென்றுகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தனுஷுக்கும், எஸ்கேவுக்கும் விரிசல் வந்துவிட்டதாகவும் பேச்சுக்கள் சமீபகாலமாக அதிகளவில் ஓடுகின்றன.
கொட்டுக்காளி விழாவில் எஸ்கேவின் பேச்சு: அதற்கு உதாரணமாக கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவா பேசியதை சிலர் மேற்கோள் காட்டினார்கள். அதாவது அந்த மேடையில், "நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கமாட்டேன்" என சிவா பேசினார். அந்தப் பேச்சு மறைமுகமாக தனுஷை தாக்கியதுதான் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தார்கள். இது போதாது என்று கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக அயலான் படத்தையும் களமிறக்கி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
தனுஷின் மேனேஜர் பேச்சு: அதனையடுத்து இரண்டு பேருக்கும் மேற்கொண்டு போட்டி உருவாகிவிட்டதாக பேச்சுக்கள் வலுவடைந்தன. இது போதாது என்று இட்லி கடை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷின் மேனேஜர், 'தனுஷால் வளர்ந்தவர்கள் எல்லாம் அவருக்கு எதிராக வேலை செய்கிறார்கள்' என கூறினார். அந்தப் பேச்சு சிவகார்த்திகேயனுக்குத்தான் என்று வழக்கம்போல் ஒருதரப்பினர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி அவர்களை சுற்றியிருப்பவர்கள் தொடர்ந்து ஏதோ ஒன்றை பேசிவைத்தாலும் அவர்கள் இதுவரை மௌனமாகவே இருக்கிறார்கள்.
சித்ரா லட்சுமணன் பேச்சு: அதேசமயம் சம்பளத்தில் தனுஷைவிட சிவகார்த்திகேயன் ஒரு படி மேலே போய்விட்டார் என்றும் குரல்கள் கேட்டன. இந்நிலையில் இதுகுறித்து நடிகர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "சம்பளம் என்று எடுத்துக்கொண்டால் சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரின் சம்பளம் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும். அவர்கள் இரண்டு பேரும் கடைசியாக நடித்த படங்கள் சரியாக போகவில்லை. அடுத்த படங்கள் வெளியாகும்வரை காத்திருக்க வேண்டும்" என்றார். முன்னதாக இரண்டு பேரும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளமாக வாங்குகிறார்கள் என கூறப்படுவது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications















