அஜித்தை விட அதிகளவு பாக்ஸ் ஆபிஸ் வேட்டை.. 100 கோடி சம்பளம் கேட்பாரா சிவகார்த்திகேயன்?
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர்கள் படத்தின் வசூலில் பாதி இங்கே தள்ளுங்க என சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் பேரம் பேசுவதை போல பேசி வருகின்றனர். முன்னணி நடிகர்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை எடுக்கவே முடியாது என்கிற நிலையில் தான் இயக்குநர்களும் படத் தயாரிப்பாளர்களும் உள்ளனர்.
பெரிய பட்ஜெட்டில் படமெடுத்தால் மட்டுமே டாப் ஹீரோக்களை நடிக்க வைக்க முடியும் என்கிற சூழல் உருவாகி விட்டது. அதன் காரணமாகவே அவர்களை அசகாய சூரர்களாகவும் லார்ஜர் தன் லைஃப் கதாபாத்திரங்களாகவும் அரசர்களாகவும் சூப்பர் ஹீரோக்களாகவும் காட்ட வேண்டிய கட்டாயம் எழுகிறது.

லப்பர் பந்து படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக அட்டகத்தி தினேஷ் நடித்து அனைத்து ரசிகர்கள் மனங்களிலும் ஹீரோ ஆன அளவுக்கு கூட இந்த ஆண்டு பல டாப் ஹீரோக்கள் மக்கள் மத்தியில் இடம்பிடிக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.
விஜய் பார்த்த வேலை: நடிகர் விஜய் 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்க ஆரம்பித்த நிலையில், தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தினார். லியோ படம் 600 கோடி வசூல் வேட்டை நடத்தியதும் 200 கோடியாகவும் தற்போது தளபதி 69 படத்துக்கு 250 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளார். திரைப்படத்தின் தரம் மற்றும் திரைக்கதை என எதுவுமே புதிதாக இல்லை என்றாலும் விஜய்யை பார்க்கவே ரசிகர்கள் முதல் நாளே 100 கோடிக்கும் அதிகமான பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக அவரை மாற்றி வைத்துள்ளனர். அவரும், இதற்கு மேல் இது போதும்டா சாமி என நினைத்து அரசியல் பக்கம் ஒதுங்கி விட்டார்.
100 கோடி சம்பளம் கேட்கும் ஹீரோக்கள்: விஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அஜித் குமார் இருவரும் தமிழ் சினிமாவில் 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கும் ஹீரோக்களாக உள்ளனர். இதில், ஜெயிலர் படத்தின் மூலம் 600 கோடி ரூபாய் வசூல் வேட்டையை பார்த்து விட்ட ரஜினிகாந்த் 200 கோடி வரை கூலி படத்துக்கு சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசியாக அஜித் நடித்து வெளியான துணிவு படம் 200 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், விடாமுயற்சி படத்துக்கு அவருக்கு 105 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குட் பேட் அக்லி படத்துக்கு 175 கோடி வரை அஜித் சம்பளம் கேட்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
100 கோடி சம்பளம் கேட்பாரா சிவகார்த்திகேயன்?: இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஹீரோவாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மூலம் 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை பார்த்துள்ள நிலையில், அவரும் அதிரடியாக 100 கோடி சம்பளத்தை கேட்பாரா என்கிற விவாதங்கள் கோலிவுட்டில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அதே போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்தால் அவர் என்ன கேட்பது, தயாரிப்பாளர்களே சம்பளத்தை ஏற்றி விட்டு விடுவார்கள் என்பது தனிக்கதை.

புரொடக்ஷன் குவாலிட்டி முக்கியம்: ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தில் குறியாக இருக்கும் அளவுக்கு படத்தின் புரொடக்ஷன் குவாலிட்டியை கருத்தில் கொள்வது இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வரும் நிலையில், அமரன் படத்தை அற்புதமான புரொடக்ஷன் குவாலிட்டியுடன் கொடுத்திருந்தனர். சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனது சம்பளத்தை விட புரொடக்ஷன் குவாலிட்டியில் கவனம் செலுத்தினால் நல்ல தரமான படங்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 60 கோடியளவுக்கு சிவகார்த்திகேயன் சம்பளம் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











