Ayalaan - சிவகார்த்திகேயன் ரசிகர்களே கொண்டாட ரெடியா?.. அயலான் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்
சென்னை: இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பெரும் கவனம் ஈர்த்த ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். படமானது பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்த சூழலில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்திருந்த படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதற்கு அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கமல் ஹாசன் படத்தை தயாரிக்கிறார்.

அயலான்: இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் கூறப்பட்டு படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
பொங்கலுக்கு ரிலீஸ்: படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிப்பு வந்தவுடன் சிவாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் இருந்தனர். சூழல் இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. அதன்படி படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.ஏலியன்களை பற்றிய படம் என்பதால் கண்டிப்பாக கொண்டாட்டத்துக்கு குறை இருக்காது என்றே ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
ட்ரெய்லர் ரிலீஸ்: இந்நிலையில் அயலான் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் வெளியாகிறது. அதன்படி படத்தின் ட்ரெய்லரானது வரும் 5ஆம் தேதி (நாளை மறு நாள்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குநர் ரவிக்குமாரும் சமூக வலைதள பக்கங்களின் மூலம் தெரிவித்திருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
செகண்ட் சிங்கிள்: இதற்கிடையே அயலான் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான 'அயலா அயலா' பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இது ஏலியனை புகழும்படியான பாடலாக அமைந்திருந்தது. கண்டிப்பாக இந்தப் பாடல் தியேட்டரில் பெரும் கொண்டாட்டத்தை தரும் என எஸ்கே ரசிகர்கள் கூறிவருகிறார்கள். பாடலை விவேக் எழுதியிருந்தார்.
ப்ரோமோஷனில் சிவகார்த்திகேயன்: முன்னதாக மாவீரன் படம் கொடுத்த வெற்றியை இதிலும் தக்க வைக்க வேண்டுமென சிவகார்த்திகேயனும் அவரது ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். மேலும் இப்படத்துக்கு போட்டியாக கேப்டன் மில்லர் படமும் வருகிறது. எனவே பொங்கல் ரேஸ் கடுமையாக இருக்கும். அதனால் அதை சமாளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் அயலான் படத்தை தீவிரமாக ப்ரோமோட் செய்துவருகிறார். அதற்காக பல பேட்டிகளை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











