அமரன் சென்ட்டிமென்ட்டை ஃபாலோ செய்யும் சிவகார்த்திகேயன்?.. இந்த வருட தீபாவளிக்கும் வருகிறாரா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அமரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்தச் சூழலில் சிவாவும், ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்திருக்கும் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாயிருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படமும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் படமும் அடுத்தடுத்து வெளியாகி 100 கோடி ரூபாய் வசூலித்தன. இதனால் எஸ்கேவின் மார்க்கெட் உயர ஆரம்பித்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் பிரின்ஸ் படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் தோல்வியை அடுத்து இனி சிவகார்த்திகேயன் அவ்வளவுதான் என்று சிலர் கூறினார்கள். ஆனால் அடுத்ததாக மாவீரன், அயலான் படங்கள் ஹிட்டாகி சிவாவுக்கு இன்னும் மார்க்கெட் போகவில்லை என்பதை உணர்த்தின.

அமரன் மெகா ஹிட்: வரிசையாக இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன்; ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் அமரன் திரைப்படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்தார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம். உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் எஸ்கே டாப் 5 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார்.
முருகதாஸுடன் படம்: இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் சிவகார்த்திகேயன். முருகதாஸ் ஒருகாலத்தில் இந்தியாவிலேயே பெரிய இயக்குநராக இருந்தவர். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் அவர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் தோல்வி முகத்தில் இருக்கிறார். தமிழில் அவர் நேரடியாக இயக்கிய தர்பார், தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கிய ஸ்பைடர் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன.
முழு மூச்சில் வேலை: இதன் காரணமாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்தில் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்தார் அவர். ஷூட்டிங்கும் மும்முரமாக நடந்தது. நிலவரம் இப்படி இருக்க ஹிந்தியில் சல்மான் கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. எனவே சிவகார்த்திகேயனின் பட வேலைகள் 80 சதவீதம் முடிந்த நிலையில் அந்தப் பட வேலைகளை பார்க்க அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கேப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்க சென்றிருக்கிறார் சிவா.
தீபாவளிக்கு ரிலீஸ்: இந்நிலையில் சிவகார்த்திகேயன் - முருகதாஸ் இணையும் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் மீண்டும் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் மீதம் இருக்கும் ஷூட்டிங்கையும், வேலைகளையும் முடித்துவிட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே போன வருட தீபாவளிக்கு வெளியாகிதான் அமரன் படம் மெகா ஹிட்டானது. எனவே அதே சென்ட்டிமென்ட்டை இதிலும் சிவா ஃபாலோ செய்கிறாரோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











