எனது வெற்றி அந்த குரூப்புக்கு பதிலடி கிடையாது.. அவர்கள் அடிப்பார்கள்.. ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அமரன் திரைப்படம் கடைசியாக அவரது நடிப்பில் வெளியாகி கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அதனையடுத்து இப்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாகவே உற்று கவனிக்கப்படுபவராக சிவகார்த்திகேயன் மாறியிருக்கிறார். டாக்டர் படம் 100 கோடி க்ளப்பில் இணைந்தது. அப்போது பலரும் லக்கில்தான் அந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறினார்கள். ஆனால் அடுத்து வெளியான டான் படமும் அந்த க்ளப்பில் சேர்ந்தது. அதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு லக் என்று சொன்னவர்கள் எல்லாம் கப் சிப் என்றாகிவிட்டார்கள். ஆனால் அடுத்ததாக நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து மீண்டும் சிவாவை வசைபாடினார்கள்.

மீண்டெழுந்த எஸ்கே: சூழல் இப்படி இருக்க ப்ரின்ஸ் படத்துக்கு பிறகு அவர் நடித்த மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதிலும் அயலான் திரைப்படம் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக களமிறங்கி பந்தயம் அடித்தது. அதனையடுத்து தன்னை வளர்த்துவிட்டவரையே கோதாவில் சிவா சாய்த்துவிட்டாரே என்று ஓபனாகவே பேசினார்கள். மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூலித்தன.
அமரன்: இப்படிப்பட்ட சூழலில்தான் வந்தது அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். கமல் ஹாசன் தயாரித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய் வசூலை பெற்றது. இதனால் கோலிவுட்டின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக மாறியிருக்கிறார் எஸ்கே. அதிலும் விஜய்யின் இடத்தை அவர்தான் பிடிப்பார் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.
அடுத்த படங்கள்: அமரன் படத்தின் மெகா வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு சென்றிருக்கிறது. பல படங்களின் விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். அதேபோல் சுதா கொங்கரா, சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோரின் இயக்கத்தில் நடிக்கும் அவர்; தனது சம்பளத்தை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்வரை உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சிவாவின் பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "என்னை நேசிக்கும் பலர் இருக்கிறார்கள். அதேபோல் என்னை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை நான் சினிமாவில் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கும். ஆனால் நான் பெறும் வெற்றி அவர்களுக்கு எப்போதும் பதிலடி கிடையாது. என்னுடைய வெற்றி என்பது என்னை நேசிப்பவர்களுக்கு மட்டும்தான். சோஷியல் மீடியாவில் சில க்ரூப்புகள் இருக்கின்றனர். எனது படம் தோல்வியடைந்துவிட்டால் என்னை கடுமையாக அடிப்பார்கள். படம் வென்றால் என்னை தவிர மற்றவர்களை பாராட்டுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











