அமரன் கொடுத்த தெம்பு.. அஜித்துடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?.. இது என்ன புதுசா இருக்கே
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அமரன் திரைப்படம் வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியை படம் பெற்றிருக்கிறது. சிவாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும். இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வியடைந்தது. அதனையடுத்து அவர் அவ்வளவுதான் என்று பலரும் பேசினார்கள். ஆனால் சுதாரித்துக்கொண்ட அவர் மாவீரன், அயலான் ஆகிய படங்களில் மீண்டும் எழுந்தார். வரிசையாக இரண்டு ஹிட்டுகளை கொடுத்ததால் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமரன்: இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருந்தார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி படம் ரிலீஸானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.
பக்கா எஸ்கே: படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடுகின்றனர். ராணுவ வீரராக அவரது உடலும், நடிப்பு, உடல் மொழியும் வேறு லெவலில் இருப்பதாகவும்; இந்தப் படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பாய்ச்சல் என்றும் மகிழ்ச்சியுடன் பேசிவருகிறார்கள் எஸ்கே ரசிகர்கள். அதற்கேற்றபடிதான் சிவாவும் படத்தில் நடித்திருந்தார். சண்டை காட்சிகளிலும் சரி, சாய் பல்லவியுடனான காதல் காட்சிகளிலும் அவர் சிறப்பாகவே செய்திருந்தார்.
அதேபோல் சிவகார்த்திகேயனை தாண்டிய நடிப்பை சாய் பல்லவி கொடுத்திருந்தார். சின்ன சின்ன முக பாவனைகளிலிருந்து பெரிய எமோஷன் சீன் என அனைத்து ஏரியாக்களிலும் அடித்து ஆடியிருந்தார் பல்லவி. இப்படி படத்தின் அனைத்து ஜானர்களும் பக்காவாக கூடி வந்ததால் வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போடுகிறது. இதுவரை 200 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
சிவாவின் முடிவு?: இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி குட் பேட் அக்லி படம் ரிலீஸாகும் அன்று சிவா - ஏ.ஆர்.முருகதாஸ் படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. முதலில் குட் பேட் அக்லி பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது படத்தின் ரிலீஸ் தேதி கொஞ்சம் தள்ளிப்போகலாம் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் அமரன் கொடுத்த தெம்பில் அஜித்துடன் மோத சிவா தயாராகிவிட்டாரோ என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











