அஞ்சாமை திராவிடர் உடைமையடா.. விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?.. அரசியல் உள்குத்து இருக்கோ?
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதற்கு முன்னர் அவர் நடித்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் அவர். இந்தச் சூழலில் பராசக்தி படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் சூழலில் அதுகுறித்த போஸ்டர் ஒன்றும் ட்ரெண்டாகிவருகிறது.
சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு எங்கேயோ சென்றுவிட்டது. அந்தப் படம் உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்து பட்டையை கிளப்பியது. இதன் காரணமாக அவரது மவுசும், மாஸும், சம்பளமும் அதிகரித்திருப்பதாக திரைத்துறையில் இருப்பவர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். கண்டிப்பாக தமிழ் சினிமாவின் அடுத்த சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் ஹீரோ சிவாவாகத்தான் இருப்பார் என்று அவரது ரசிகர்கள் இப்போது உறுதியோடு சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.

விஜய் கொடுத்த துப்பாக்கி: சூழல் இப்படி இருக்க விஜய் நடித்த கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் சிவாவிடம் கையில் துப்பாக்கியை கொடுத்து விஜய் பேசும் வசனம் அவ்வளவு அப்ளாஸை அள்ளின. முக்கியமாக விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் தன்னுடைய இடத்துக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன்தான் வருவார் என்று பூடகமாக அந்த வசனத்தின் மூலம் சொல்லிவிட்டதாக அப்போது பலரும் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி, ஜன நாயகன்: இந்நிலையில் விஜய் தற்போது ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். விஜய்க்கு இது கடைசி படம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாக வேண்டும் என்று அவரும், அவரது ரசிகர்களும் ஆவலோடு இருக்கிறார்கள். அதேபோல் அமரன் கொடுத்த மெகா ஹிட்டையும், மாஸையும் பராசக்தி படத்தை ஹிட்டாக கொடுத்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எஸ்கேவும் அவரது ரசிகர்களும் தீர்க்கமாக இருக்கிறார்கள்.
விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் சிவாவின் பராசக்தி படம் பற்றிய புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அஞ்சாமை திராவிடர் உடைமையடா என்ற வசனத்துடன் கூடிய அந்தப் போஸ்டரில், '2026 பொங்கல் வெளியீடு' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்களோ பராசக்தி படம் பொங்கலுக்கு வெளியாகிறதா?.. எனில் விஜய்யுடன் மோதுவதற்கு சிவகார்த்திகேயன் தயாராகிவிட்டாரோ என்று கேள்விகளை முன்வைத்துவருகிறார்கள். அதேசமயம் படத்தை தயாரித்திருக்கும் டான் பிக்சர்ஸ் இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அரசியல் உள்குத்து?: இதற்கிடையே இந்த விவகாரத்தை வைத்து இன்னொரு பேச்சும் கிளம்பியிருக்கிறது. அதாவது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியதிலிருந்து திமுகவை கடுமையாக தாக்கி பேசிவருகிறார் விஜய். பராசக்தி படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. எனவே தொடர்ந்து தாக்கி பேசிவரும் விஜய்யை சிவாவை வைத்து பழி வாங்க திட்டமிட்டிருப்பதாகவும்; ஜன நாயகனைவிடவும் பராசக்திக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கும் பிளானில் அவர்கள் இருப்பதாகவும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஜன நாயகன் படத்துக்கு சிக்கல் கொடுக்கப்படும் என்கிற சிக்னலை ஒருதரப்பினர் இப்போதிருந்தே உணர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். அரசியல் சதுரங்கத்திலிருந்து விஜய்யின் கடைசி படம் தப்பிக்குமா என்றும் பலர் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











