கமல் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?.. சேயோன் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தாய் கிழவி படத்தை வெறும் 9 கோடி பட்ஜெட்டில் எடுத்து 75 கோடிக்கும் அதிகமான வசூலை பாக்ஸ் ஆபீஸிலேயே ஈட்டிக் கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன். சிவகார்த்திகேயனுக்கு தாய் கிழவி திரைப்படம் பல மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.
தாய் கிழவி திரைப்படம் வெளியாகும் முன்னமே அந்த படத்தின் பிசினஸ் சிவகார்த்திகேயனுக்கு லாபத்தைக் கொடுத்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் 'சேயோன்' படத்தில் நடிக்க முடிவு செய்தார். ஆனால், அந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்காமல் கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

சேயோன் படத்தின் அறிமுக வீடியோவே நல்ல ரீச் கொடுத்துள்ள நிலையில், அந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சேயோன் படத்தின் பட்ஜெட் மற்றும் சிவகார்த்திகேயனின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதராஸி, பராசக்தி பிளாக்பஸ்டர் ஆகல: கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் 300 கோடி அளவுக்கு வசூல் ஈட்டிய நிலையில், சிவகார்த்திகேயனை நம்பி பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்தனர். ஆனால், மதராஸி திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டவே தடுமாறியது. அதே போலவே 140 கோடி பட்ஜெட்டில் உருவான பராசக்தி திரைப்படமும் பெரிய வசூல் ஈட்ட முடியாமல் திணறியது. 2 படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெறவில்லை.
மீண்டும் கமல் தயாரிப்பில்: இந்நிலையில், மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவே சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார். தாய் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் வில்லேஜ் பேஸ்ட் மற்றும் குல தெய்வ வழிபாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டிப்பாக பட்டித் தொட்டி எங்கும் படம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேயோன் பட்ஜெட்: சிவகார்த்திகேயன் சம்பளத்தையும் சேர்த்தே அமரன் படத்தின் பட்ஜெட் அதிகபட்சமாக 120 கோடி தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சேயோன் படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கு எல்லாம் சென்றால், சிவகார்த்திகேயன் அந்தளவுக்கு வசூல் ஈட்டுவாரா? என்கிற கேள்விகள் கிளம்பின. மேலும், நடிகர்களின் சம்பளம் தான் தமிழ் சினிமா நஷ்டத்தை சந்திக்கவே முக்கிய காரணம் என தொடர்ந்து சினிமா பிரபலங்கள் சொல்லி வரும் நிலையில், மதராஸி மற்றும் பராசக்தி படங்களால் வாங்கிய அடியை மனதில் வைத்துக் கொண்டு வெறும் 50 கோடி பட்ஜெட்டில் சேயோன் படத்தை உருவாக்கி வருகிறார்கள் என தகவல்கள் கசிந்துள்ளன.
சம்பளத்துக்கு பதில்: இந்த படத்துக்காக சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்காமல் அதற்கு பதிலாக லாபத்தில் பங்கு வாங்கிக் கொள்கிறேன் என சிவகுமார் முருகேசன் மீதுள்ள நம்பிக்கையால் இறங்கி நடித்து வருகிறாராம். 9 கோடி பட்ஜெட்டில் எடுத்த படத்தையே 75 கோடி வசூலாக பல மடங்கு உயர்த்திக் கொடுத்த சிவகுமார் முருகேசன் கண்டிப்பாக 50 கோடி பட்ஜெட் கொடுத்தால் படத்தை தரமாக செதுக்கி சிவகார்த்திகேயனுக்கு குறைந்த பட்சம் 200 கோடி பாக்ஸ் ஆபீஸ் வரும் படத்தைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சேயோன் படத்திற்கு பிறகே வெங்கட் பிரபுவின் பிரம்மாண்ட படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











