சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணைந்த சூரி.. லைன் அப்லாம் வெயிட்டா இருக்கே.. வேற லெவல்
சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த சூரி இப்போது ஹீரோவாக ஜொலித்துவருகிறார். கடந்த வருடத்தில் அவர் நடித்த மாமன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக மண்டாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதுவும் அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்து அவரது கரியரில் முக்கியமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.
மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து சினிமாவில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தவர் சூரி. சங்கமம், காதல், தீபாவளி என ஏராளமான படங்களில் சின்ன சின்ன ரோல்களை செய்த அவருக்கு; வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை தந்தது. புரோட்டா சாப்பிடும் காமெடி அவரது நீண்ட கால பசியை தீர்த்து வைத்தது என்றே சொல்ல வேண்டும். அந்தப் படத்திலிருந்து சூரியின் காட்டில் மழைதான் பெய்ய ஆரம்பித்தது. விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியில் கலக்க ஆரம்பித்தார்.

ஹீரோவான சூரி: தொடர்ச்சியாக காமெடியில் ஜொலித்த அவருக்கு கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் படமே வெற்றிமாறனின் இயக்கமாகும். தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சூப்பராக நடித்திருந்தார். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அப்போதிருந்து காமெடி ரோல்களை மூட்டை கட்டிவிட்டு கதையின் நாயகனாக தொடர்ந்துவருகிறார். அப்படி அவர் நடித்த கொட்டுக்காளி, கருடன் படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸையே கொடுத்தன. ஹீரோ சூரிக்கென்றும் தனி வியாபாரமும் கருடன் படத்திலிருந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
மாமன் சந்தித்த விமர்சனங்கள்: கடந்த வருடத்தில் அவர் நடித்த மாமன் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக படத்தின் கதைக்களம் கடுமையான விமர்சனத்தையும், ஸ்வாசிகாவின் ரோல் பெரிய நெகட்டிவிட்டியையும் சம்பாதித்தது. அந்தப் படத்துடைய கதையை சூரிதான் எழுதியிருந்தார். அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை முன்வைத்து அந்தக் கதையை எழுதியிருப்பாரோ என்ற சந்தேகமும் அனைவரிடமும் எழுந்தது. விமர்சனத்தில் அடி வாங்கினாலும் வியாபாரத்தில் ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை.
மண்டாடி சூரி: மாமன் படத்துக்கு பிறகு மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் நீண்ட நாட்கள் உருவாக்கத்தில் இருக்கிறது. அதுமட்டுமின்றி மண்டாடிக்காக மிகப்பெரிய உழைப்பை சூரி கொட்டியிருப்பதாகவும்; தன்னுடைய கரியரில் மிகப்பெரிய ஹிட்டை இப்படம் தனக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் அவர் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
புதிய படம்: அதன்படி இன்று நேற்று நாளை, அயலான் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய ரவிக்குமர் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இதுவரை இரண்டு படங்களை மட்டுமே ரவி இயக்கியிருக்கிறார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே கோலிவுட்டில் தனித்த இடத்தை பிடித்திருக்கின்றன. இப்போது சூரியுடன் சேர்ந்திருப்பதால் கண்டிப்பாக புது மேஜிக்கை இந்தக் கூட்டணி செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















