Soori - யப்பா என்னா டெடிகேஷன்.. கொட்டுக்காளி படத்துக்காக சூரி எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்.. ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.
முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் நடித்து கலக்கினார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே சிரிப்பு எமோஜி ரகம்.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து கொட்டுக்காளி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
ஏழு கடல் ஏழு மலை: மேலும் விடுதலை 2 படத்தில் நடித்துவரும் சூரி; ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில்கூட அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியானது. அந்த க்ளிம்ப்ஸில் சூரியுடன் நிவின் பாலி உரையாடுவது போன்ற காட்சிகள் இருந்தன. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சூரி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொட்டுக்காளிக்காக சூரி செய்த விஷயம்: இந்நிலையில் கொடுக்காளி படத்துக்காக சூரி தன்னுடைய குரலை சேதப்படுத்தியது தெரியவந்திருக்கிறது. அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கொட்டுக்காளி படத்தின் ஒரு காட்சியில் எனது குரல் கட்டியதுபோல் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக்கொண்டார். அது பெரிய டேக் என்பதால் ரீ டேக் எடுப்பது எல்லாம் கஷ்டம். இதனால் நானே ஒரு ஐடியா செய்தேன். ஒரு மருத்துவரிடம் சென்று என்னுடைய குரல் கொஞ்சம் கட்டியதுபோல் இருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டேன்.
மருத்துவரின் பரிந்துரை: அதை கேட்ட டாக்டரோ சிரித்துவிட்டார். நான் அவரை ரொம்பவே வற்புறுத்தியதன் பேரில் அவர் எனக்கு சில நாட்டு மருந்துகளை பரிதுரை செய்தார். இந்த மருந்துகளை சாப்பிட்டால் நமது குரல் சேதமடைந்துவிடும் என்று கூறினார். மரப்பட்டைகள், ஒரு சில இலைதழைகள் என அனைத்தையும் சேர்த்து சாப்பிட தொடங்கினேன். ஒருகட்டத்தில் பேசவே முடியாத அளவுக்கு எனது குரல் கட்டிவிட்டது. பிறகு அதோடுதான் அந்த ஷாட்டில் நடித்தேன்” என்றார். இதனை பார்த்த ரசிகர்கள், ஐயோ படத்துக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கை சூரி எடுத்திருக்கிறாரே என்று ஆச்சரியப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











