கார்த்தி - ரஞ்சனி திருமணம்... ஏற்பாடுகள் மும்முரம்!!

இளம் நடிகர்களில் முன்னணியி்ல் உள்ளவர் கார்த்தி. சிவகுமாரின் இளையமகன். இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஈரோட்டில் உள்ள மணமகள் வீட்டில் நடந்தது.
தற்போது திருமண ஏற்பாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கார்த்தியின் பூர்வீகம் கோவை. இப்போதும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவுக்காரர்கள் இங்கே வசிக்கிறார்கள். அது மட்டுமின்றி, மாவட்டம் முழுவதிலும் இவர்களுக்கு உறவினர்கள் உள்ளனர்.
கோவை மண்டலத்தில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருமே இந்தத் திருமணத்துக்கு வரவிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, தென்னிந்திய திரையுலகமே அன்றைய தினம் கோவையில் குவியவிருக்கிறது.
அதே நாளில் இயக்குநர் செல்வராகவனுக்கும் திருமணம் என்பதால், நடிகர் நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளனர். எனவே ஒட்டுமொத்த திரையுலகமும் கோவைக்கு வருகிறது.
மணமகளுக்கு பக்கத்து மாவட்டமான ஈரோடுதான் சொந்த ஊர். இவர்களுக்கும் உறவுக்காரர்கள், நண்பர்கள் ஏராளம் என்பதால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தத் திருமணத்துக்கு திரண்டு வருவார்கள் என எதி்ர்ப்பார்க்கப்படுகிறது.
அனைவரையும் சிறப்பாக உபசரிக்க வேண்டும் என்பதற்காக சிவகுமார் குடும்பமே ஒவ்வொரு வசதியையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறது.
விருந்தினர்கள் உணவு அருந்த, வாகனங்கள் நிறுத்த, ஓய்வாக அமர என எல்லாவற்றுக்கும் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து இன்று நடந்த பிரஸ்மீட்டில் நடிகர் கார்த்தி கூறுகையில், "எங்களுக்கு சொந்தக்காரர்கள் நிறைய பேர். ஊரே சொந்தக்காரர்கள்தான். எல்லாரையும் கூப்பிட்டு வைத்து திருமணம் செய்வது எனக்கு மிகுந்த நிறைவாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் எந்த சிறு குறையும் நேராத அளவுக்கு உபசரிப்பு நடக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதற்காகத்தான் கொடீசியா அரங்கை தேர்வு செய்தோம். திருமண நாள் நெருங்க நெருங்க இனம் புரியாத பரபரப்பை உணர்கிறேன்," என்றார்.
முதல்வர் பங்கேற்பு
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 7-ந்தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் திரளாக பங்கேற்று வாழ்த்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சூர்யா - ஜோதிகா திருமணத்தை நடத்தி வைத்தவரும் முதல்வர் ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











