Vijay - அமைதியாகவே இருந்து அழுக வைச்சிட்டார்.. விஜய் பற்றி மனம் திறந்த ஸ்ரீகாந்த்.. செம சம்பவம்
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் விஜய் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.
விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகிறது.
தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
ஸ்ரீகாந்த் பேட்டி: இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் பற்றி பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நண்பன் படத்தின்போது நானும், ஜீவாவும் டான்ஸ் ரிகர்சல் செய்துகொண்டிருப்போம். அப்போது விஜய் வந்து, இரண்டு நிமிடங்கள் மட்டுமே பார்ப்பார். பார்த்துவிட்டு டேக் போகலாம் என்பார். அவரிடம் சென்று என்ன சார் புரியுதா என்று கேட்டால் எனக்கே தெரியவில்லை என்று சொல்வார். ஆனால் டேக்கில் பிய்த்துவிடுவார்.
ஷாக் ஆகும் விஜய்: அதேபோல் சில டைம் இவ்வளவு பெரிய ஸ்டெப்பா கட் பண்ணி எடுத்துக்கலாமா என்று கேட்பார். எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் கேமரா ஆன் செய்துவிட்டால் வேறு மாதிரி மாறிவிடுவார். என்ன நடிகர் இவர் என்று நாங்கள் பிரமிப்போடு பார்ப்போம். அதுமட்டுமில்லாம அவர் எங்களை பார்த்து யப்பா கொஞ்சம் குறைத்து ஆடுங்க; என்னால முடியாது என்பார். ஆனால் அவர் டேக்கில் ஸ்கோர் செய்துவிடுவார். அவர் மட்டும்தான் தெரிவார். ஒருகட்டத்தில் அவர் ஆடுவதை பார்த்து அழுகையே வந்துவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











