10 வருடங்களாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா செய்யும் உதவி தெரியுமா?.. அட தங்கமான மனுஷனா இருக்காரே
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ரஞ்சித் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா கடந்த பத்து வருடங்களாக செய்துவரும் உதவி குறித்த தகவலை சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா வெளிப்படுத்தியிருக்கிறார்.
சினிமா துறையில் ஸ்டண்ட் கலைஞர்களின் வேலை ரொம்பவே ரிஸ்க்கானது. கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிரே போகக்கூடிய வேலையை செய்துவரும் அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுக்கப்படுவதாக கூறினாலும்; பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அதிலும் உயிரை பணயம் வைத்து ஸ்டண்ட் செய்யும் அவர்களை டூப் என்று சொல்லும் அவல நிலையும் இங்கு நிலவத்தான் செய்கிறது.
வேட்டுவம் படப்படிப்பில் விபத்து: சண்டை காட்சிகளின்போது பலர் அடிபட்டிருக்கிறார்கள், உயிரிழந்திருக்கிறார்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்னதாக, பா.ரஞ்சித் இயக்கிவரும் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கிலும் நடந்தது. ஒரு சண்டை காட்சி எடுக்கும்போது அதில் நடித்த மோகன் ராஜ் என்ற ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ரஞ்சித் மீது வழக்கு: இந்த விவகாரம் பெரிய பூகம்பத்தை திரைத்துறையில் உண்டு செய்திருக்கிறது. மேலும் இந்த விபத்தில் உயிர் போனதற்கு காரணமே தயாரிப்பு நிறுவனம் (ரஞ்சித்தான் தயாரிக்கிறார்) அலட்சியம் காட்டியதுதான் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி பா.ரஞ்சித் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக பலரும் தங்களது கருத்தினை தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டண்ட் சில்வா பேட்டி: இந்நிலையில் பிரபல சண்டை பயிற்சியாளரான கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், "ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என நடிகர் சூர்யா கடந்த பத்து வருடங்களாக இன்சூரன்ஸ் தொகை செலுத்திவருகிறார். அவர் ஏற்கனவே அகரம் ஃபவுண்டேஷனை வைத்து உதவி செய்துவருகிறார். வருடமானால் பத்து லட்சம் ரூபாய் கட்டுவார். அதனைப் பார்த்து நான் வியந்துபோனேன். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் அவர் இதுகுறித்து வெளிப்படையாக சொன்னதில்லை" என்றார்.
அக்ஷய் குமார் செய்தது: மோகன் ராஜின் உயிரிழப்பு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி மற்ற திரையுலகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி இனியாவது சண்டை கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்திய திரைத்துறையை சேர்ந்த 650 சண்டை கலைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். இதன் மூலம் ஐந்து லட்சம் ரூபாய்வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











