ரஜினி படத்திலிருந்து விலக என்ன காரணம்?.. பிரச்னை அதுதானாம்.. முதன்முறையாக சுந்தர்.சி ஓபன் டாக்
சென்னை: ரஜினிகாந்த் படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறியது பலருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. எவ்வளவு பெரிய வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி செல்கிறாரே என பேசினார்கள் ஆனால் அவர் எதை பற்றியும் கவலைப்படவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டுவிட்டார். இந்நிலையில் ரஜினி படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை முதன்முதலில் மனம் திறந்து பேசியிருக்கிறார் அவர். அது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இந்தப் படங்கள் தவிர்த்து இன்னும் பல ஹிட் படங்களை இயக்கிய சுந்தர்.சி; தலைவர் 173 படத்தை இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் பலருக்கும் மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது. ஏனெனில் துப்பாக்கி, ரத்தம் போன்றவற்றோடு நடித்து ரஜினியே டயர்டு ஆகியிருப்பார். எனவே ஃபேமிலி ஆடியன்ஸை கவர்வதற்கு கமர்ஷியலாக ஒரு படம் கொடுக்க சுந்தர்தான் சரியான ஆள் என கொண்டாடினார்கள்.

கமல்ஹாசன் தயாரிப்பு: அதுமட்டுமின்றி இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரே படத்தில் ரஜினி - கமல் - சுந்தர்.சி என சீனியர்கள் இணைந்திருப்பதால்; தாங்கள் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இப்படத்தில் இறக்குவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது. கண்டிப்பாக தரமான வெற்றியை ரஜினிக்கு கொடுத்து சுந்தர்.சி தன்னை நிரூபிப்பார் என்றுதான் திரைத்துறையில் அனைவருமே ஆரூடம் கூறினார்கள். ஆனால் திடீரென அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'இந்தப் படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் விலகுகிறேன். இந்த முடிவை நான் கனத்த இதயத்தோடு எடுக்கிறேன். வாய்ப்பு கொடுத்த ரஜினி - கமலுக்கு நன்றி. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார்.
சுந்தர்.சி பேட்டி: அவர் இப்படத்திலிருந்து விலகியதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. இந்நிலையில் சுந்தர்.சியே அதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "உண்மையில் சொல்லப்போனால் அந்தப் படத்தில் எனக்கு அதிக ப்ரெஷர் இருந்தது. என்னுடைய இஷ்டத்துக்குத்தான் இத்தனை வருடங்களாக படங்கள் செய்கிறேன். மக்களுக்கு பிடிக்கும் என தோன்றினால் அதை செய்வேன். ஆனால் அதனை தயாரிப்பு தரப்பிடமோ யாரிடமோ சொல்லி புரிய வைக்கக்கூடிய திறமை எனக்கு இல்லையோ என தோன்றுகிறது.
ரஜினி பிரச்னை இல்லை: எனக்கு இத்தனை வருடங்களில் கதையே சொல்ல தெரியாது. ஒரு படத்தில் முக்கியமான ஆள் வந்து ஐடியா சொன்னால் நான் கன்வின்ஸ் ஆகிவிடுவேன். இவ்வளவு பெரிய படத்தை செய்யும்போது அது தனிநபர் சார்ந்த முடிவாக இருக்க முடியாது. எனவே அதீத அழுத்தம் இருந்தது. எனவே அந்த ப்ராஜெக்ட்டுக்கும் உண்மையாக இருக்க முடியவில்லை; வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும் உண்மையாக இருக்க முடியவில்லை. அதனால்தான் விலகினேன். ரஜினிகாந்த்தோ, கமல்ஹாசனோ இதற்கு காரணமில்லை.
கண்டிப்பாக செய்வேன்: படத்திலிருந்து விலகுகிறேன் என அறிவிக்கப்போவதாக ரஜினியிடம் சொல்லிவிட்டுதான் அறிவித்தேன். எங்கள் மூன்று பேரின் அவுட் லுக்குமே வேறு வேறாக இருக்கும். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் நாம் சேர்ந்து செய்யலாம் என்றுதான் ரஜினி சொல்லியிருக்கிறார். இதேமாதிரி நிறைய தடவை எனக்கு நடந்திருக்கிறது. அது வெளியே தெரியவில்லை அவ்வளவுதான். எனக்கும் ரஜினிக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இந்தக் கதையை நிச்சயம் செய்வேன்" என்றார்.


Click it and Unblock the Notifications