அஜித்துக்கு முதலில் ஃபோன் வந்ததே விஜய்யிடமிருந்துதான்.. அட செம விஷயமா இருக்கே
சென்னை: அஜித்குமாருக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. மேலும் அஜித்தும் துபாயில் நடந்த கார் ரேஸில் தனது அணியுடன் கலந்துகொண்டார். அவரது அணி அந்த ரேஸில் மூன்றாவது இடம் பிடித்தது. இப்படி ஏகேவின் ரசிகர்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சி தரும் விஷயங்களாக கடந்த சில நாட்களாக நடந்தன. இந்தச் சூழலில் அஜித்துக்கு விஜய் ஃபோன் செய்த விஷயம் மேற்கொண்டு இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
அஜித்தும், விஜய்யும் தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஹீரோக்கள். இரண்டு பேருமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் நடிக்க வந்தார்கள். மேலும் ராஜாவின் பார்வையிலே படத்தி இரண்டு பேரும் சேர்ந்தும் நடித்தார்கள். ஆனால் அதற்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் படத்தில் முதலில் விஜய்யுடன் அஜித்தான் நடித்தார். ஆனால் சம்பள விவகாரத்தில் தயாரிப்பு தரப்புடன் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகினார்.

அஜித் Vs விஜய்: சூழல் இப்படி இருக்க இரண்டு பேருமே வெற்றி, தோல்வி என இரண்டையுமே மாற்றி பார்த்தார்கள். தங்களது திறமையையும் படிப்படியாக வளர்த்துக்கொண்டார்கள். இதனால் ரஜினி, கமல் என்ற நிலைக்கு பிறகு அஜித், விஜய் என்ற நிலை உருவானது. ஒருகட்டத்தில் அது அஜித் Vs விஜய் என்ற நிலைமைக்கும் நகர்ந்தது. இந்த நிலைமையால் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் அவ்வப்போது மோதல் உருவாகும். அதுமட்டுமின்றி ஒருவரையொருவர் மாற்றி தரக்குறைவாக விமர்சிக்கவும் செய்தார்கள்.
நண்பர்கள்தான்: அஜித், விஜய் ரசிகர்களுக்கிடையேயான சண்டை நாளாக நாளாக தீவிரமடைந்துகொண்டே போனது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கும், வேலாயுதம் படத்தின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடந்தபோது இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். மேலும் தங்களது படங்களில் அடுத்தவரின் பாடல்கள், காட்சிகளையும் வைத்தார்கள். இதனால் இரண்டு பேருமே நண்பர்கள்தான்; ரசிகர்கள்தான் வீணாக அடித்துக்கொள்கிறார்கள் என்ற பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன.
அஜித்தின் ஸ்டேட்மெண்ட்: சமீபத்தில்கூட கார் ரேஸில் வென்ற பிறகு பேட்டி கொடுத்த அஜித், . 'விஜய் வாழ்க, அஜித் வாழ்க என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்’ என்று கேட்டு ஒரே போடாக போட்டார். இதனையடுத்து அஜித் வேண்டுமென்றே இப்படி பேசுகிறார் என விஜய் ரசிகர்கள் கூறினார்கள். அஜித் ரசிகர்களோ, 'ஏகே பத்ம பூஷன் விருது வழங்கியதற்கோ, கார் ரேஸில் வென்றதற்கோ ஏன் விஜய் வாழ்த்து சொல்லவில்லை’ என்று கேள்வி எழுப்பினார்கள்.
சுரேஷ் சந்திராவின் விளக்கம்: இந்நிலையில் இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறுகையில், “அஜித்குமார் கார் ரேஸில் வெற்றி பெற்றதும் விஜய்யிடமிருந்துதான் முதன்முதலாக வாழ்த்து வந்தது. அதேபோல் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டபோதும் விஜய் முதலில் ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார். இரண்டு பேருக்குள்ளும் ஆத்மார்த்தமான அன்பும், நட்பும் இருக்கிறது. அதனால் விஜய் அஜித்துக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று வெளியான தகவலில் உண்மையில்லை”என்றார்.


Click it and Unblock the Notifications











