சூர்யாவோட மனசே மனசுதாங்க.. ரெட்ரோ லாபத்தை அவர் என்ன செஞ்சிருக்காரு பாருங்க
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகிய இரண்டு திரைப்படங்களில் கங்குவா மோசமான அடியை வாங்கியது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த அடி வாங்கியிருந்த அப்படத்துக்கு பிறகு ரெட்ரோ படம் வெளியானது. இந்தப் படம் கங்குவா அளவுக்கு அடி வாங்கவில்லை. ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் சூர்யா செய்திருக்கும் செயல் நெகிழ்ச்சியடைந்த செய்திருக்கிறது.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு கெட்ட கனவாகவே இருக்கும். ஏகப்பட்ட பில்டப்புகளோடு வெளியான படம் தோல்விகளையும், ட்ரோல்களையும் சந்தித்தது. ஒன்றுமே இல்லாத படத்தை வைத்துக்கொண்டுதான் இந்தப் படத்தை பற்றி அவ்வளவு பேசினார்களா?.. பேச்சை கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும் என்று பலரும் ஓபனாகவே அடித்தார்கள். இப்படியாக எழுந்த விமர்சனங்களுக்கு ஜோதிகாவும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
ரெட்ரோ சூர்யா: இப்படிப்பட்ட நிலைமையில்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. உடனடியாக ஒரு ஹிட் தேவைப்படுவதால் இந்தப் படத்தை ரொம்பவே அவரும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். இதில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் என பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஜோதிகாவும், சூர்யாவும் சேர்ந்து தயாரித்திருந்தார்கள்.

எப்படி இருக்கு படம்?: முதன்முறையாக கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்திருப்பதன் காரணமாக இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஒன்றாம் தேதி ரிலீஸானது படம். படம் பார்த்தவர்களில் பாதி பேருக்கு படம் பிடித்திருந்தது, பாதி பேருக்கு பிடிக்கவில்லை. கார்த்திக்கின் வழக்கமான ட்ரீட்மென்ட் இதில் இருந்தாலும் என்னமோ ஒன்று மிஸ் ஆகிறது என்று படத்தை பார்த்தவர்களில் பலர் கூறினார்கள்.
என்ன மிஸ் ஆகிறது?: கேங்ஸ்டர் மற்றும் தென் மாவட்டங்களை அடிப்படையாக வைத்து கார்த்திக் இதுவரை எடுத்த படங்கள் அத்தனையுமே வேறு தளத்தில் இருந்தன. ஆனால் ரெட்ரோ படத்தின் கதையோ இந்த இரண்டு விஷயங்களை கொண்டிருந்தாலும் திரைக்கதை எங்கெங்கோ ஆடியன்ஸை இழுத்துக்கொண்டு சென்றது. இதனால் சீட்டில் இருந்த அனைவருமே ஒருகட்டத்துக்கு மேல் நெளிய தொடங்கினார்கள். மேலும் கார்த்திக் சுப்புராஜ் எப்போதும் வலுவான திரைக்கதையை அமைப்பார். அதுதான் இந்தப் படத்தில் முக்கியமாக மிஸ் ஆகியிருக்கிறது என்றே கருதப்படுகிறது.
வசூல் ரீதியாக ரெஸ்பான்ஸ்: படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கங்குவாவை ஒப்பிடும்போது இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை. வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்ற இப்படமானது; இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் மேல் உலக அளவில் வசூல் செய்திருக்கிறதாம். இதனால் படத்தை தயாரித்த 2டி நிறுவனத்துக்கு லாபமும் வர தொடங்கியிருக்கிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.
சூர்யாவின் செயல்: இந்நிலையில் சூர்யா செய்திருக்கும் ஒன்று அனைவரையும் நெகிழ செய்திருக்கிறது. அதாவது ரெட்ரோ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் 10 கோடி ரூபாயை அவர் அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார். முன்னதாக அகரம் அறக்கட்டளையை தொடங்கிய சூர்யா, ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை அந்த அறக்கட்டளை மூலம் ஏற்று படிக்க வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா இதற்காக பலரால் பாராட்டவும்படுகிறார்.


Click it and Unblock the Notifications











