இது ஒரு அழகான கூட்டணி.. அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா.. அப்போ வாடிவாசல்?
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்தது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா; தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துவருகிறார். ரெட்ரோ படம் மே ஒன்றாம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. இந்த நிலையில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சுருயா.
தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே இன்று கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களுள் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறது. கடைசியாக சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த அப்படத்தில் திஷா பதானி, நட்டி, கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்துக்கு தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவும் ஏற்றிவிட்டார்கள். ஆனால் அந்தப் படம் பெரும் வெற்றியை பெறுவதற்கு பதிலாக படுதோல்வியை சந்தித்தது.
படத்துக்கு ஓவர் ஹைப்: குறிப்பாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்த ஞானவேல் ராஜா, 'டிசம்பர் மாதம் நடக்கும் கங்குவா படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்துவிடுங்கள்' என்று கூறினார். அதேபோல் இரண்டாயிரம் கோடி ரூபாயை படம் வசூலிக்கும் என்றும் ஞானவேல் ராஜா நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொன்னபடி எதுவுமே நடக்கவில்லை. அதுமட்டுமின்றி கங்குவா படத்தால் ஞானவேல் ராஜாவுக்கு பெரிய நஷ்டம் உண்டாகிவிட்டது என்றும் தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.

கார்த்திக் சுப்புராஜுடன் ரெட்ரோ படம்: இதற்கிடையே கங்குவா படத்தை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படத்தில் நடித்தார் அவர். அந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் இந்தப் படமானது மே ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கு முன்னதாக வெளியான கங்குவா தோல்வியை சந்தித்து கிண்டலுக்குள்ளானதால் ரெட்ரோ படத்தை ஹிட்டாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. கார்த்திக்கும் அந்த பொறுப்பை உணர்ந்து படத்தை இயக்கியிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
அடுத்த படம்: இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்று கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் ஓடின. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராமல் இருந்தது. நிலைமை இப்படி இருக்க ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றிருக்கிறார் சூர்யா. அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அறிவித்த சூர்யா: அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, "இன்று நான் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். சித்தாரா என்ட்டெர்டெய்ன்மென்ட் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோருடன் அடுத்த படத்துக்கு இணைந்திருக்கிறேன். இது ஒரு அழகான கூட்டணி. இந்தப் படத்துக்காக ஹைதராபாத்தில் நிறைய நேரம் செலவழிக்க இருக்கிறேன். இந்த அழகிய பயணத்துக்கு உங்களது அன்பும், ஆதரவும் தேவை" என்று குறிப்பிட்டார். இதன் மூலம் வெங்கி - சூர்யா கூட்டணி உறுதியாகிவிட்டது.
வாடிவாசல் நிலைமை?: சூர்யா இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துவருகிறார். இதனை முடித்துவிட்டு வாடிவாசல் படத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கப்போவதாக அறிவித்திருப்பதால்; இந்தப் படத்துக்கு பிறகுதான் வாடிவாசலுக்கு சூர்யா செல்வாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகிறார்கள். அதேசமயம் வாடிவாசல் முடித்துவிட்டுதான் வெங்கி படத்துக்கு சூர்யா செல்வார்; இதனால் ரசிகர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்பதே கோடம்பாக்கத்தின் இப்போதைய லேட்டஸ்ட் தகவல்.


Click it and Unblock the Notifications











