காளிகாம்பாள் கோயிலில் சூர்யா சாமி தரிசனம்.. கார்த்திக் சுப்புராஜ் படமாவது சீக்கிரம் வருமா?
சென்னை: சூர்யாவின் 44-வது படம் அந்தமானில் உள்ளத் துறைமுகத்தில் வரும் ஜூன் 2ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதனை முன்னிட்டு சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்படுவதற்கு முன்பாக நடிகர் சூர்யா காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய வெற்றி பெறாத நிலையில், அதற்கு அடுத்த படத்தை ரொம்பவே கவனத்துடன் பார்த்து பார்த்து செய்து வருகிறார் சூர்யா.

அதன் காரணமாகவே பாலாவின் வணங்கான் படத்திலிருந்து பாதியில் வெளியேறிவிட்டார். ஹரியின் அருவா படத்தை வேண்டாம் என நிராகரித்த சூர்யா சுதா கொங்கராவின் புறநானூறு படத்தையும், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தையும் சற்று தள்ளி வைத்துள்ளார்.
கங்குவா எப்போ ரிலீஸ்?: நடிகர் சூர்யாவின் ரசிகர்களின் ஒட்டுமொத்த கேள்வியாக இருப்பது கங்குவா திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்பதுதான். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இந்தியில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தினால்தான் படத்தின் பட்ஜெட்டுக்கு மேல் வசூல் வரும் என்கின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்: பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட கடந்த ஆண்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44-வது படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வில்லன் விஜய் குமாரா?: சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு வசனகர்த்தாவாக இருந்த உரியடி விஜய் குமார் ஃபைட் கிளப் மற்றும் எலக்சன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், சூர்யாவின் 44-வது படத்துக்கு அவர்தான் வில்லன் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 6-வது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.
காளிகாம்பாள் கோயிலில் தரிசனம்: அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர் துறைமுகத்தில் சூரியா 44வது படத்தின் அதிரடியான சண்டைக் காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ள நிலையில், அந்தமானுக்கு செல்வதற்கு முன்னதாக சென்னை காளிகாம்பாள் கோயிலில் நடிகர் சூர்யா இந்த சாமி தரிசனம் செய்த படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்து நீண்ட தலை முடியுடன் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.
பொங்கலுக்கு வருமா?: கங்குவா திரைப்படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக சூர்யா நடித்து வரும் 44வது திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வருமா என்கிற கேள்வியை தற்போது ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் வேகவேகமாக நல்ல படங்களை இயக்குவதில் கெட்டிக்காரர் என்பதால் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் இந்த படம் சீக்கிரம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











