கருப்பு சக்சஸ் மீட்.. நெகிழ்ச்சியாக பேசிய சூர்யா.. என்ன பேசினார் தெரியுமா?.. வேற லெவல்
சென்னை: சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகி கடந்த 15ஆம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பு நன்றாகவே முழுமையடைந்திருக்கிறது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. அதில் சூர்யா பேசியிருப்பது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே சொல்லிக்கொள்ளும்படியான ஒரு கமர்ஷியல் ஹிட் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆகிவிட்டன அப்படி ஒரு ஹிட் அவருக்கு கிடைத்து. இப்படிப்பட்ட நிலைமையில்தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க; சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். கடந்த 15ஆம் தேதி படமானது தியேட்டர்களில் வெளியானது.

எப்படி இருக்கு படம்?: இந்தப் படமாவது தங்களுக்கு திருப்தியை தருமா இல்லை கங்குவா, ரெட்ரோ போல் அப்செட் ஆக்குமா என்ற சந்தேகத்தோடு சூர்யா ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். அவர் பயந்தபடி எதுவும் இல்லாமல்; படத்தை நன்றாகவே உருவாக்கியிருந்தார் பாலாஜி. கதைக்கு தேவையான விஷயங்கள், சூர்யாவுக்கு தேவையான மாஸ் ப்ளஸ் கமர்ஷியல் விஷயங்கள், குடும்பங்களுக்கு தேவையான விஷயங்கள் என அத்தனையையும் சரியாக கலந்து கொடுத்திருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.
வசூலிலும் சூப்பர்: பல ரசிகர்கள் ஒரு முறை பார்த்ததோடு நிறுத்தாமல் அடுத்தடுத்த முறையும் தங்கள் குடும்பத்தினரை அழைத்து சென்று கருப்பு படம் பார்க்கிறார்கள். இதன் காரணமாக விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் படம் சக்கைப்போடு போட்டுவருகிறது. உலக அளவில் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்திருக்கிறது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள், குடும்பத்தினர், சூர்யா என எல்லோருமே மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
கருப்பு சக்சஸ் மீட்: சூழல் இப்படி இருக்க இன்று சென்னையில் கருப்பு படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. அதில் பேசிய சூர்யா, "நேரில் வந்து நன்றி சொல்ல வேண்டும் என தோன்றியது. இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் முடிவு எடுத்தேன். அனைத்துமே சரியாக இருந்தது மாதிரி இருந்தது. முழுக்க முழுக்க இது ஆர்.ஜே.பாலாஜியின் விஷன்தான். அவர் சொல்லும்போது இது தியேட்டரில் பெரிய ரெஸ்பான்ஸை பெறும் என்ற நம்பிக்கை பிறந்தது.
நம்பிக்கை வைத்துதான் எல்லா படங்களையும் செய்கிறோம். முதல் மீட்டிங்கிலிருந்தே இந்தப் படத்தில் எல்லா விஷயங்களும் நன்றாக போயின. அதற்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்தான் காரணம். அனைத்து முடிவுகளையும் சரியாக எடுக்க வைத்த கருப்ப சாமிக்கு நன்றி. இது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எதிர்பார்க்காத பெரிய வெற்றியை கொடுத்த அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிரேன். இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்தில் நான் தியேட்டரில் பார்த்தது இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற இடங்களிலும் இந்தப் படம் கனெக்ட் ஆகியிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
