Kanguva Second Look - கங்குவா படத்தின் செகண்ட் லுக்.. சும்மா மெரட்டலா இருக்கே. சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்
சென்னை: சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் படம் என்றால் அது கங்குவாதான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். இந்த சூழலில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. ஆனால் அவருக்கு அந்தப் படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. ஞானவேல் ராஜா தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படமானது வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்பு: சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படத்துக்கான பட்ஜெட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சூர்யாவின் கரியரில் முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.
க்ளிம்ப்ஸ்: சிவா இயக்கத்தில் சூர்யா கமிட்டட் என்று செய்தி வெளியானதும் சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஏனெனில் இதற்கு முன்னதாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் அவர்கள் கண் முன் வந்துபோனது. ஆனால் தன் மேல் சந்தேகப்பட்டவர்களுக்கு கங்குவா க்ளிம்ப்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது.
என்ன கதை: கங்குவா படம் முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் பீரியட் படமாக கங்குவா உருவாகிறது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படிதான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சிவா. அதேபோல் அந்த பீரியட் பகுதிதான் 3டியில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. முக்கியமாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் அதற்கு பதிலடி கொடுக்க சிவா மும்முரமாக உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
இரண்டு பாகங்கள்: மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கை சிவா முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக முதல் பாகம் மெகா ஹிட்டாகும்; எனவே இரண்டாம் பாகத்தையும் அதற்கு பிறகு வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் செகண்ட் லுக்: இந்நிலையில் கங்குவா படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பொங்கலை முன்னிட்டு தற்போது கங்குவா செகண்ட் லுக் வெளியாகியிருக்கிறது. அந்த போஸ்டரில், வாளுடன் ஒரு சூர்யாவும், கோட் சூட் அணிந்து ஒரு சூர்யாவும் என மொத்தம் இரண்டு சூர்யாக்கள் இருக்கிறார்கள். இதனைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று மீண்டும் தங்களது யூகங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து போஸ்டரை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











