விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. அஜித் பக்கா ஃபேமிலி மேன்.. நடிகை தமன்னா ஓபன் டாக்
சென்னை: கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்டு வந்துகொண்டிருந்த தமன்னாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. அதனையடுத்து பாலிவுட்டுக்கு சென்றார் அவர். அங்கே பல ரோல்களை செய்த அவர்; மீண்டும் தமிழில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக புருஷன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர்; விஜய் மற்றும் அஜித் குறித்து பேசியிருக்கிறார்.
வில்லியாக சினிமாவில் அறிமுகமாகி பிறகு ஹீரோயினாக மாறியவர் தமன்னா. பல ஹிட் படங்களில் நடித்து தமிழில் பிஸியாக இருந்தார். இங்கே எப்படி இருந்தாரோ அதேபோல் தெலுங்கிலும் பிஸியானார். அங்கும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ரசிகர்களால் மில்க் பியூட்டி எனவும் கொண்டாடப்பட்டார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அவரது ஆட்சிதான் தமிழில் நடந்தது குறிப்பிடத்தக்கது. பல ஹீரோக்கள் அவருடன் நடித்துவிட ஆசைப்பட்டதாகவும் அப்போதைக்கு நிறைய கிசுகிசுக்கள் எல்லாம் வந்தன.

ஹிந்திக்கு சென்ற தமன்னா: ஆனால், திடீரென அவரது மார்க்கெட் ஆட்டம் கண்டது. அதனையடுத்து தனது ரூட்டை மாற்றி மும்பைக்கு பறந்தார். அங்கு நடிப்போடு கவர்ச்சியையும் காண்பிக்க சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது. ஹீரோயினாக நடிப்பது மட்டுமின்றி பல ஹிந்தி படங்களில் ஒரு பாடலுக்கு ஓவர் கவர்ச்சி நடனம் ஆடுகிறார். அதற்காக கோடி கணக்கில் சம்பளமாகவும் பெறுகிறார். அதே ஃபார்முலாவைத்தான் தமிழில் ஜெயிலர் படத்திலும் செய்தார். பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
காதல் டூ பிரேக் அப்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த சூழலில் அவர்களது உறவு பாதியில் முறிந்தது. இப்போது சிங்கிளாக இருக்கிறார். அதேசமயம் தனது கரியரில் முழு கவனத்தையும் இப்போது திருப்பியிருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக புருஷன் படத்தில் நடித்துவருகிறார்.
தமன்னா பேச்சு: இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "புருஷன் பட ஷூட்டிங்கிற்காக சென்னை வந்தேன். அந்த ஷெட்யூல் முடிந்துவிட்டது. நாளை மும்பைக்கு செல்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நீங்கள் எல்லோரும் நல்ல எனர்ஜியோடு இருந்தீர்கள். ஒவ்வொரு மொமண்ட்டையும் அனுபவித்தேன். திரைத்துறைக்கு வந்து 21 வருடங்கள் ஆகிவிட்டன. நீங்கள் எப்போதும் போல் எனக்கு அன்பு கொடுக்கிறீர்கள். அதற்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய் மற்றும் அஜித் பற்றி: விஜய்யுடன் சுறா படத்தில் நடித்தேன். அவர் ரொம்பவே சிம்ப்பிளான நபர். பேச்செல்லாம் குறைவாகத்தான் பேசுவார். ஆனால் அவரை மாதிரி யாராலும் நடனம் ஆட முடியாது. அஜித்துடனும் நான் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு அவர் கேரவனில் சுடச்சுட இட்லி செய்து கொடுத்தார். அவர் ரொம்பவே ஸ்வீட்டான நபர். பக்கா ஃபேமிலி மேன்" என்றார். அவரது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications















