போஸ்டர்லாம் சூப்பர்.. இருந்து என்ன பயன்?.. படம் நடக்கலையே.. ஹைப்பை ஏற்றி ஏமாற்றிய டாப் ஹீரோஸ் படங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் சினிமாவை ரசிக்காதவர்களே இல்லை. சினி நட்சத்திரங்களை தங்கள் வீட்டில் ஒருவராகவும், தலைவராகவும் ஏற்று கொண்டாடிவருகிறார்கள். அவர்களது ஒவ்வொரு படத்தையும் திருவிழா போல் கொண்டாடுவார்கள். சமயங்களில் படங்களின் அறிவிப்பையே அவ்வளவு கொண்டாடுவார்கள். ஆனால் அறிவிக்கப்பட்ட படங்கள் தொடங்கப்படாமலேயே நின்றுபோனால் உச்சக்கட்ட சோகத்துக்கும் செல்வார்கள்.
தமிழ்நாட்டில் சினிமா அனைவரது ரத்தத்திலும் ஊறியிருக்கிறது. தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகளின் படங்கள் ரிலீஸாகும் நாள்தான் ரசிகர்களுக்கு திருவிழா, தீபாவளி எல்லாமே. நடிகர்களின் அடுத்த படங்கள் என்ன யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பதை தேடி தேடி தெரிந்துகொள்வார்கள். சமயங்களில் அந்தப் படங்கள் அறிவிக்கப்படுவதோடு சரி. ஷூட்டிங் தொடங்காமல் ட்ராப்பாகிவிடும். அப்படி ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நான்கு பேரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு போஸ்டர் எல்லாம் வெளியாகி ட்ராப் செய்யப்பட்ட படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
ரஜினிகாந்த்தின் ஜக்குபாய்: சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா என மெகா ப்ளாக் பஸ்டர் படங்களில் நடித்தார். இப்படிப்பட்ட சூழலில் ரஜினியை வைத்து ரவிக்குமார் இயக்குவதாக இருந்த படம்தான் ஜக்குபாய். பாலஸ்தீன கெட்டப்பில் கையில் துப்பாக்கியோடு ரஜினி அமர்ந்திருக்க, 'இறைவா எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.. நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று' என பஞ்ச் வசனத்தோடு போஸ்டர் வெளியானது. ஆனால் சில காரணங்களால் ஷூட்டிங் நடக்காமல் ட்ராப்பானது. பின்னர் அதே பெயரில் சரத்குமார் நடிப்பில் ஜக்குபாய் படம் வெளியானது.

கமலின் மருதநாயகம்: இந்தியாவிலேயே சிறந்த நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். சினிமாவில் அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. எதுவாக இருந்தாலும் விரல் நுனியில் வைத்திருக்கக்கூடிய அவர்; மருதநாயகம் படத்தை இயக்கி நடிப்பதாக இருந்தார். அறிவிப்பு வெளியாகி சில நாட்கள் ஷூட்டிங்கும் சென்றார். ஆனால் அப்போதைய தொழில்நுட்பம், பட்ஜெட் விவகாரங்களால் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது. இப்போதுவரை அவர் எங்கு சென்றாலும் அவரிடம் மருதநாயகம் பற்றிய ஒரு கேள்வியாவது விழுந்துவிடும். சமீபத்தில்கூட அவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டதற்கு; 'இப்போதைய தொழில்நுட்பத்தில் சாத்தியம்' என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார்.
அஜித்தின் மிரட்டல்: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கித்தான் திரைத்துறையில் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட். முதல் பட வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித்தை வைத்து மிரட்டல் என்ற படத்தை ஆரம்பித்தார். அஜித், அசின் ஆகியோரை வைத்து ஃபோடோஷூட்டும் நடத்தினார்கள். சில நாட்கள் ஷூட்டும் செய்தார்கள். ஆனால் படம் ட்ராப்பாகிவிட்டது. பிறகு சூர்யா, அசின் உள்ளிட்டோரை வைத்து கஜினி என்ற பெயரில் அந்தப் படம் தமிழில் வெளியாகி மெகா ஹிட்டடித்தது. மேலும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று முருகதாஸை பான் இந்தியா இயக்குநராக மாற்றியது.
விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஒன்று: கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் கௌதம் மேனன். அவர் விஜய்யை வைத்து யோஷன் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்கவிருந்தார். ஸ்டைலிஷாகவும், இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்டிலும் இப்படத்தை இயக்க கௌதம் திட்டமிட்டிருந்தார். அதுதொடர்பான போஸ்டரும் வெளியாகி விஜய் அதில் படு ஸ்டைலாக இருந்ததை பார்த்து தளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலை அந்தப் படத்தின் மீது வைத்திருந்தார்கள். ஆனால் போஸ்டர் வந்ததோடு சரி; படத்தை ட்ராப் செய்துவிட்டார்கள். இப்போதும்கூட கௌதம் பற்றி விஜய் ரசிகர்களிடம் பேசினால்; ச்ச யோஹன் படத்தை எடுத்திருக்கலாம் என்று ஏக்க பெருமூச்சு விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











